Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

புதுக்கோட்டை

அறந்தாங்கி ஆலங்குடி பகுதியில் வளர்ச்சிப்பணிகளை தொடக்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளை  சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சியர்   கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற  ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர்,  அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், திருநாளூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம், ஆலங்குடி பேரூராட்சி, நாடியம்மன் தெரு விரிவாக்கம் பகுதியில் ரூ.77 இலட்சம் மதிப்பீட்டில் சாலை, ஆலங்குடி அரசு மருத்துவம னையில் ரூ.4.98 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வகக் கருவிகளுடன் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வகக் கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கீழையூர் குழந்தை விநாயகர் கோவிலுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலைப் பணி, கீழையூரில் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு பணி, திருநாளூர் ஊராட்சி முத்துமாரியம்மன் கோவில் அருகில் ரூ.4.24 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைப் பணி, ஆவணத்தான்கோட்டையில் ரூ.9.44 இலட்சம் மதிப்பீட்டில் வடக்கு மயான சாலைப் பணி, குளமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைப் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகள் பூமி பூஜை செய்தும் என ஆகமொத்தம் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் சமூக மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில், ஆலங்குடியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி ; அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர்; சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், தலைமை மருத்துவர் மரு.பெரியசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top