Close
நவம்பர் 22, 2024 6:12 காலை

திருவொற்றியூரில் நூலக வார விழா: புத்தகக் கண்காட்சி…

சென்னை

சென்னை திருவொற்றியூரில் நூலக வார விழா புத்தகக் கண்காட்சியை கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.

சென்னை திருவொற்றியூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய நூலக வார விழா மற்றும் புத்தகக் கண்காட்சியை சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் 55-வது தேசிய நூலக வாரவிழா மற்றும் புத்தகக் கண்காட்சி திறப்பு விழா தொடக்க நிகழ்ச்சி   திங்கள்கிழமை நடைபெற்றது.

 இதில் சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு புத்தக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.

அப்போது நூலகத்தில் உறுப்பினராக இணைந்த பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகங்களை வழங்கினார். மேலும் நூலகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

புத்தகக் கண்காட்சி குறித்து கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் நா.துரைராஜ் கூறியதாவது:   திருவொற்றியூர் கிளை நூலகத்தில் தமிழக அரசின் ஒப்புதலுடன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து புத்தக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில்  குழந்தைகள்,  பள்ளி மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் புத்தகங்கள், அறிவியல், கலை, இலக்கிய புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு 15 சதவீதம் விலை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 இப்புத்தகக் கண்காட்சி கிளைநூலகத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இருக்கும்.  வடசென்னையிலேயே இது போன்ற சிறப்பு வசதி திருவொற்றியூர் நூலகத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நூலக வாரவிழாவினையொட்டி ஒரு வார காலத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை,  கலை மற்றும் கைவினைப் பயிற்சி வகுப்பு, சிந்தை விளையாட்டு, வாசிப்போம் நேசிப்போம் விழிப்புணர்வு ஊர்வலம், மக்களைத் தேடி நூலகம் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் துரைராஜ்.

இந்நிகழ்ச்சியில் நூலகர் பானிக் பாண்டியர், கிளைநூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் குரு.சுப்பிரமணி, எம்.மதியழகன், இரா.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top