புதுக்கோட்டை மாவட்டம்,எஸ்.குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆலங்குடி வட்டம், எஸ்.குளவாய்பட்டியில்,மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் (13.09.2023) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
முகாமில், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் சுயஉதவிக் குழு உள்ளிட்ட துறைகளின் சார்பில், 421 பயனாளிகளுக்கு ரூ.1,20,18,383 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதந்தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் சார்பில் செயல் படுத்தப்படும் திட்டங்களின்கீழ் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்துகொள்வதுடன், அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா .
இந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) க.ஸ்ரீதர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் .வள்ளியம்மை தங்கமணி.
வட்டாட்சியர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் (பாலையூர்)வெள்ளையம்மாள் வெள்ளைச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் நளினி பாரதிராஜா (எஸ்.குளவாய்பட்டி), தமிழரசன் (சேந்தாக்குடி), பாலகிருஷ்ணன் (பாலையூர்), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.