Close
மே 11, 2024 1:28 மணி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி

திருச்சியில் நடந்த உலக வன விலங்குகள் தின நிகழ்வில் மணப்பாறை வன சரக அலுவலர் பேசினார்.

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் மகளிர் ஓருங்கிணைப்பாளர் முனைவர் பி.தனலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் , தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் மாணவர் ஓருங்கிணைப்பாளர் முனைவர் செல்வராஜ் வாழ்த்துரையுடன் , முன்னிலை வகித்தார்கள்.

விழாவிற்கு மணப்பாறை வனச்சரக அலுவலர்  மேரி லென்சி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனங்களின் தட்பவெப்பநிலையை, சீராக வைப்பதுடன்,மழைபெய்ய வைக்க முக்கிய காரணங்களாகவும் அமைகின்றது.ஆறுகளின் பிறப்பிடமாக, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளாக வனங்கள் திகழ்கின்றன.

பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்கும் காடுகள் வனவிலங்குகளுக்கு உய்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும், மலைவாழ் மக்களுக்கு அரணாகவும் விளங்குகின்றன. மண் அரிமானத்தை தடுத்து வேளாண்மையின் வளர்ப்புத் தாயாகவும் காடுகள் விளங்குகின்றன.

நச்சு வாயுக்களின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறைந்து வரும் வேளாண்மை உற்பத்தி திறன் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வாயு மாசுக்கள் போன்ற முக்கிய காரணங்களினால் வனங்களின் முக்கியத்துவம் முன்பை விட தற்பொழுது உணரப்படுகின்றது.

பல்லுயிர் பாதுகாப்புக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதுவும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், பல்லுயிர் பாதுகாப்புக்கு, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைக் காட்டிலும், சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்றார்.

மாணவர் பிரிவில் வனச்சரக அலுவலர் ஏ.மகேஸ்வரன் மாணவர்களின் மத்தியில் உரையாற்றினார். இறுதியாக கல்லூரி மாணவி அபிநந்தனா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top