உலகில் எத்தனையோ பணிகள் இருக்கின்றன. அவற்றில் நமக்கு ஏற்றது எது என்று யோசிக்கும்போது, இந்த மூன்று கேள்விகளைக் கேட்கலாம். மற்ற எல்லோரையும் விட நான் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்வேனா? இந்தப் பணியைச் செய்வது எனது மனதிற்கு பிடித்திருக்கிறதா? இந்தப் பணியைச் செய்வதால் என்னுடைய வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார ஆதரவு (அதாவது, பணம்) கிடைக்குமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும்’ ஆம் ‘ என்று பதில் வந்தால் அதுதான் நமக்கு ஏற்ற சிறந்த பணி. ஏதேனும் ஒன்றுக்கு’ இல்லை’ என்ற பதில் வந்தாலும் அது முழுமையற்ற வாழ்க்கையாக அமைந்துவிடும்.
முதல் இரண்டும் (திறமை, மனமகிழ்ச்சி) கிடைத்து, மூன்றாவதாகப் பணம் கிடைக்காவிட்டால், பெரும் மனக்குழப்பம் வரும். நம்பிக்கையோடு தொடர்ந்தால் மூன்றாவது விஷயமும் கிடைக்குமா? பணம் கிடைக்கிற வேலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இதைப் பொழுதுபோக்காக அமைத்துக்கொள்வதா? சூழ்நிலையைப் பொறுத்து அவரவர் தீர்மானிக்க வேண்டியதுதான்.
ஆனந்துக்குச் சதுரங்கத் திறமை இளமையிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் தனக்கு மன மகிழ்ச்சி தருகிறது என்பதையும் அவர் உணர்ந்து விட்டார். அந்நிலையில் பொருளாதார சிரமங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்ததால், மூன்றாவது விஷயமான பணத்தையும் அவரால் சம்பாதிக்க முடிந்தது. அவரிடம் நான் கற்க வேண்டிய பாடம்! – விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய கட்டுரையில்(பக்.33).
இறையன்பு “10 ஆண்டுகள் பத்திரம்” என்று 18 வயதிலிருந்து 27 வயதுவரையிலான காலத்தைக் குறிப்பிடுவார். இந்தக் காலம் தான் ஒருவருடைய எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியது. “இந்தப் பத்தாண்டுகளில் ஒருவர் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்.
எப்படிப்பட்ட நண்பர்களோடு பழகுகிறார், எது போன்ற புத்தகங்களை வாசிக்கிறார், எது மாதிரியான லட்சியங்களை வளர்த்துக்கொள்கிறார், எந்தக் குறிக்கோளை நோக்கிப் பயணிக்கிறார், எது அவருடைய ரசனையாக இருக்கிறது என்பனவற்றைப் பொறுத்தே அவருடைய வெற்றியும் பங்களிப்பும் தீர்மானிக்கப்படுகிறன. (வெ.இறையன்பு, உச்சியிலிருந்து தொடங்கு. பக்.150 – 155)
இந்த வயதில் இருப்பவர்களுக்கான புத்தகமே
“வெல்லுவதோ இளமை”.
‘மைக்ரோ சாப்ட்’ பில்கேட்ஸ்,
இந்திய இளைஞர்களை தாடிக்கு மாற்றிய விராட் கோலி,
தடகள வீரர் உசேன் போல்ட்,
‘ஹாரி பார்ட்டர்’ நாவல்களின் பிதாமகள் ஜே.கே.ரெளலிங்,
‘சதுரங்க ‘விஸ்வநாதன் ஆனந்த்,
‘முகநூல் ‘ ஜூக்கர்பர்க்,
‘டென்னிஸ்’செரினா வில்லியம்ஸ்.
‘ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்,
‘பெப்சி’ இந்திரா நூயி,
ஒரு படத்தை 1000 நாட்களுக்கு ஒரு தியேட்டரில் ஓட வைத்த ஷாருகான்,
‘கூகுள்’, லாரி, செர்க் நண்பர்கள்,
இந்தியாவில் முதலில் தனியார் ஆங்கிலப்பள்ளியைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர்,
‘அலிபாபா ‘ஜாக் மா @ மா யுன் ,
இந்திய சினிமா உலகின் ‘உயர்ந்த மனிதன்’ அமிதாப்பச்சன் போன்ற 25 வெற்றியாளர்கள் இளமையில் சந்தித்த சவால்கள், கொண்ட லட்சியங்கள் அதை அடைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் யாவற்றையும் சொக்கன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இந்த நூலில் .
“இந்து தமிழ் திசை”வெளியிட்டுள்ள இந்த நூலை வாசிக்கும் இளைஞர்களுக்கு உற்சாகம் தரும்.வாங்கிக் கொடுங்கள் அன்பளிப்பாக.
# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #