Close
நவம்பர் 22, 2024 12:20 காலை

உணவகத்தொழிலின்  அபார வளர்ச்சியால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு..!

தேனி

சாலையோர உணவகங்களால் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் பிறதுறைகளை விட உணவகத்தொழில் துறை தான் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. பிற துறைகளின் வளர்ச்சி 6 சதவீதம் என்றால், உணவுத் துறையின் வளர்ச்சி மட்டும் 10 சதவீதத்தை தாண்டி விட்டது. குறிப்பாக நான்கு வழிச்சாலை ஓரங்களில் புற்றீசல் போல அதிகரித்து வரும் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளில் வியாபாரம் களைகட்டி வருகிறது.

குறிப்பாக நகர் பகுதிக்குள் உள்ள ஓட்டல்களில் பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதிகள் சரியாக இல்லை என்ற பரவலான புகார் உள்ளது. தவிர நகர்பகுதிகளில் உள்ள பேக்கரிகள், டீக்கடைகளுக்கு வருபவர்களுக்கு அமர இடம் கூட விடுவதில்லை.

வந்து நின்று கொண்டே டீ, வடை சாப்பிட்டு விட்டு, தேவையானதை வாங்கிக் கொண்டு கடந்து விட வேண்டும் என்ற ரீதியில் பொதுமக்களுக்கு உட்கார இடம் தராமல் மறைமுக நெருக்கடி தருகிறது. இந்த சில வசதிகளையும் நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலைகளின் ஓரங்களில் இருக்கும் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள் பூர்த்தி செய்கின்றன.

எனவே பொதுமக்கள், சாலையோர பயணிகள், வாடிக்கை யாளர்கள் ஊருக்கு வெளியே சாலையோர கடைகளை தேடிச் செல்கின்றனர். இதனால் இங்கு கூட்டம் அதிகரிப்பதால் வேலை வாய்ப்புகளும்  அதிகரிக்கிறது. இந்த வேலைகளை செய்ய பெண்கள் தான் அதிகளவில் முன்வருகின்றனர். இதனை நடத்துபவர்களும் பெண்களையே வேலைக்கு சேர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரும்பாலும் இந்த ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் கிராமப்பகுதிகளை ஒட்டியுள்ள நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளில் உள்ளதால், கிராமங்களை சேர்ந்த பெண்களை வேலைக்கு சேர்க்கின்றனர்.

இந்த வேலைக்கு தரமான சம்பளம் கிடைப்பதாலும், வேன் மூலம் கிராமத்தில் இருந்து அழைத்துச் சென்று பணி முடிந்ததும் வேன் மூலம் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவதாலும், பெண்களும் ஆர்வமுடன் பணிகளில் சேருகின்றனர். இதனால் கிராம பெண்களுக்கான வேலை வாய்ப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top