Close
நவம்பர் 21, 2024 6:16 மணி

கந்தர்வக்கோட்டை ஒன்றிய பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்

கந்தர்வக்கோட்டை ஒன்றிய பள்ளிகளில் உற்சாகமாக சமத்துவ பொங்கல் கொண்டாடி  மாணவர்கள் மகிழ்ச்சியில்  திளைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில்  மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் இட்டு பொங்கலோ பொங்கல் சமத்துவ பொங்கல் என்று உற்சாகக்குரல் எழுப்பி  கொண்டாடினர்.

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்கள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்கள் வகுப்பிற்கு ஒரு பானை என்கிற வீதம் 5 பானைகளில் ஒன்றாக கூடி பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துக்குமார் தலைமை வகித்தார்.

கந்தரவக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா பொங்கல் பண்டிகை குறித்து பேசியதாவது

போகி பண்டிகை தினத்தன்று காலையிலேயே அனைவரும் குளித்து வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருள்களை வீட்டின் முன்பு எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாளாகும். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டு, பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள்.

பால் பானையிலிருந்து பொங்கி வழியும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் உரைப்பார்கள்.

மாட்டு பொங்கல் உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள். கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும். மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்து, வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கப்படுகிறது. மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் சரவணாமூர்த்தி, சத்தியபாமா, ஜஸ்டின் திரவியம், பாரதிராஜா, சக்திமணிகண்டன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரஷ்யா, பயிற்சி ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top