Close
நவம்பர் 1, 2024 10:36 மணி

3 சதவீத உள் ஒதுக்கீடு: முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த அருந்ததியர் கூட்டமைப்பு முடிவு

திருச்சியில் நடந்த அருந்ததியர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் இரா தங்க பிரகாசம் பேசினார்.

அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா சென்னையில் நடத்துவது என அனைத்து அருந்ததியர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் இன்று அனைத்து அருந்ததியர் அமைப்புகள் மற்றும் அறக்கட்டளை கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் இரா. தங்கப்பிரகாசம் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னாள் துணை இயக்குனர் ராஜா ஜெகஜீவன் முன்னிலை வகித்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்  டாக்டர் ஜெகதீஷ் குமார் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று சதவீத உள் ஒதுக்கீட்டை தக்க வைத்துக்கொள்வதற்காகவும், உரிமையை பாதுகாத்துக்கொள்வதற்கும் தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் கூட்டமைப்பு (டிஏஏஎப்) என்ற அமைப்பு புதிதாக அமைக்கப்பட்டது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீ. மணிவண்ணன் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் அனைத்து அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா நடத்துவது என்ற தீர்மானம் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தின் கிராமப்புற வளர்ச்சித் துறை தலைமை செயல் அலுவலர் வீரபாண்டியன் ஐஏஎஸ் காணொலி காட்சி வாயிலாக  உரையாற்றினார்.

அவர் பேசும்போது அருந்ததியர்களுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையில் அரசியல் சட்டம் நமக்கு வழங்கிய உரிமை. அந்த உரிமையை தக்க வைக்க வேண்டியது நமது கடமை. இதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

அந்த தீர்ப்புக்கு ஆதரவு குரல்கள் வருகின்ற அதே வேளையில் எதிர்ப்பு குரல்களும் வருகின்றன. எதிர்ப்பு குரல் வரத்தான் செய்யும். இந்த உள் ஒதுக்கீடு என்பது என்பது எளிதாக நமக்கு கிடைக்கவில்லை. பல கள போராட்டங்களின் விளைவாக கிடைத்திருக்கிறது. எனவே எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களையும் நமக்கு ஆதரவாக மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

அதற்காக இந்த கூட்டத்தில் ஒரு கூட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதனை ஒரு  இயக்கமாக நடத்த வேண்டும்.நமக்கு வழங்கப்பட்ட உரிமையை தக்க வைக்க வேண்டும். நமது உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் அதற்கான கருத்து பரப்புரைகளை பல்வேறு தளங்களிலும் எடுத்துரைக்கவேண்டும். இளைஞர்கள் இதில் அதிக அளவில் பங்கு பெற வேண்டும். இதற்காக  புத்தக வெளியீட்டு விழா, கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்றார்

இந்த கூட்டத்தில் பௌர்ணமி அறக்கட்டளை, இளைஞர் வழிகாட்டி அமைப்பு, விருதுநகர் அறம் அறக்கட்டளை, சென்னை அருள் ஒளி உறவின்முறை சங்கம், பெஸ்ட் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அமைப்பு, அருந்தமிழர் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அமைப்பு, ஈரோடு ஓடத்துறை ஆர்வி அறக்கட்டளை, திருச்சி பெல் வெல்ஃபேர் கவுன்சில், ஏ ஆர் வழக்கறிஞர்கள் சங்கம்,அரிமாஸ் மருத்துவர்கள் சங்கம், துறையூர் அருந்ததியர் அரசு ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் உதவி செயற்பொறியாளர் அசோகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top