Close
நவம்பர் 14, 2024 5:35 மணி

திடீர் கரிசனம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேள்வி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளர்களு்கு பேட்டி அளித்தார்.

ஆசிரியர் அரசு ஊழியரின் மீது திடீரென கரிசனம் கொண்டு பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் தேர்தல் வாக்குறுதி எண்களை எல்லாம் சொல்லி அவற்றை நிறைவேற்றவில்லை என்று ஊடகங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென எங்கள் மீது அக்கறை கொண்டு பேசியிருப்பது மிகுந்த வேதனைiயையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு எங்களின் பல்வேறு கோரிக்கைகளை செவிமடுத்து கூட கேட்காமல் முடக்கி விட்டு அதன் விளைவாக இன்று எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, எவ்வாறு இப்படி திடீர் பாசம் எங்கள் மீது கொள்கிறார் என்பது வியப்பாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அவர்களே நாங்கள் தற்போது கேட்கும் கோரிக்கைகள் அனைத்தும் தங்கள் ஆட்சி காலத்தில் தங்களால் முடக்கப்பட்டவையே
அகவிலைப்படி உயர்வை முடக்கி விட்டுப் போனது யார்?
சரண் விடுப்பு ஒப்படைப்பை முடக்கி விட்டு போனது யார்?
உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை முடக்கி விட்டுப் போனது யார்?
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த பல்வேறு குழுக்களை அமைத்து பல ஆண்டுகள் அலைகழித்து கடைசியில் அம்போ என எங்களை விட்டு விட்டுப் போனது யார்?
கடந்த கால ஆட்சியிலே நியாயமான கோரிக்கைகளுக்காக நாங்கள் போராடிய போது எங்கள் மீது தற்காலிக பணியிடை நீக்கம் இடம் மாறுதல் கைது வழக்கு என்று பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது யார்?
துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் ஊதியத்தை கொச்சைப்படுத்தி பேசியது யார்?
ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதியத்தை பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து எங்களை பழிவாங்கியது யார்?
எல்லாம் நீங்கள்தானே உங்களை எப்படி அரசு ஊழியர் ஆசிரியர் இனம் மறக்கும்?
இன்று திடீரென நீங்கள் எங்கள் மீது கொண்டிருக்கிற பாசத்தை நம்புவதற்கு யாரும் இங்கு தயாராக இல்லை .
திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போது அமைகிறதோ அப்பொழுதுதான் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறியது என்பது வரலாறு.
ஊதியக்குழு மாற்றங்கள் பெரும்பாலும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான் அமல்படுத்தப்பட்டது .
ஆசிரியர் ,அரசு ஊழியர்களுக்கான குடும்ப நலநிதியை அமல்படுத்தி தற்போது அதை ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கியது திமுக ஆட்சியில் தான்
மகப்பேறு விடுப்பை ஒரு ஆண்டுகளாக மாற்றி வழஙகியது திமுக அரசு
ஒற்றை கையெழுத்தில் 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வந்தது திமுகவின் கலைஞர் அரசு
உயர்கல்விக்கான ஊக்க ஊதிய முறையை கொண்டு வந்தது திமுக அரசு
இப்படி எண்ணற்ற திட்டங்களை ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்

தாங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை சந்திக்கவே மறுத்தீர்கள் உங்களை சந்திப்பதற்காகவே நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்றைய முதல்வர் பலமுறை எங்களை நேரில் அழைத்து பேசியிருக்கிறார் எங்கள் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் செய்யாமல் யார் செய்வது என்று ஒவ்வொரு முறையும் எங்களிடம் உறுதிமொழி அளித்து கொண்டிருக்கிறார்
நீங்கள் ஏற்படுத்தி விட்டு சென்ற கடுமையான நிதி நெருக்கடியை சரி செய்து தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பாக கூட ஆசிரியர் அரசுகளின் அத்தனை கோரிக்கைகளும் தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்

சொன்னதை செய்பவர்கள் ஏன் சொல்லாததையும் செய்பவர்கள்
அதனடிப்படையில் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட எங்களுடைய அத்தனை கோரிக்கையும் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது விரைவில் அதை நிறைவேற்றுவார்

ஒட்டுமொத்த ஆசிரியர் அரசு ஊழியர் இனம் அவருக்கு மீண்டும் மிகுந்த ஆதரவளித்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவரை மீண்டும் ஆட்சி கட்டிலில் பெரும்பான்மையான ஆதரவோடு அமர வைப்போம்.

வீணாக யாரும் கனவு காண வேண்டாம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க யாரும் ஆசைப்பட வேண்டாம்

விரைவில் எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் அதன் விளைவாக எங்கள் ஆதரவோடு மீண்டும் 2026 இல் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்

இவ்வாறு கு.தியாகராஜன் அளித்த பேட்டியில் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top