திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று காலை முதல் வாக்காளர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக புகைப்படம் கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் விளைவாக, ஒரு வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயரைத் திருத்துவதற்கு வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில், வாக்குச்சாவடி அமைப்பில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். குறிப்பாக புதிய வாக்காளர் சேர்க்கை படிவம் 6, வெளிநாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6ஏ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்கான ஆதார் எண் உண்மை சான்று 6 பி, வாக்காளர்பட்டியில் பெயர் சேர்ப்பதை ஆட்சேபிக்கவும், ஏற்கனவே உள்ள பெயரை நீக்குவதற்கும் படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களையும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் மேற்கு ஒன்றியம் ஆவணியாபுரம் பகுதியில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகாமை திமுக மாநில மருத்துவர் அணித் தலைவர் போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் எ. வ.வே கம்பன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த பாக முகவர்களிடம் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம் முகாமினை நகராட்சி ஆணையர் சோனியா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மேலாளர் ரவி, வருவாய் ஆய்வாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செங்கம்
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.