Close
நவம்பர் 27, 2024 2:25 மணி

மழையினை எதிர்கொள்ள தயாராகும் தேனி! மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்

தேனியில் தூர்வாரப்பட்ட ராஜவாய்க்காலை நகராட்சி துணைத் தலைவர் அட்வகேட் செல்வம் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

தேனியில் கடும் மழை பெய்தால் வேகமாக மழைநீரை கடத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. தேனியில் வடிகால் வசதிகள் மிக, மிக குறைவு. மழை பெய்தால், பழைய பேருந்து நிலையம்  உட்பட நகரின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி விடும். குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தில் சிறிய மழைக்கே 3 அடி உயரத்திற்கு பல மணி நேரம்  தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த காலங்களில் இது போல் பலமுறை நடந்துள்ளது.

இந்த முறை மழைநீரால் எந்த பகுதியும் பாதிக்கப்படாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து  தேனி கலெக்டர் ஷஜீவனா, நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் அட்வகேட் செல்வம், கமிஷனர் ஏசுராஜ் உட்பட பலர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேனி நகரில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக அங்கு மழைநீர் வடிகால் பணிகளை செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

இதன் ஒரு பகுதியாக துணைத்தலைவர் அட்வகேட் செல்வம் தலைமையில் ஒரு குழு அமைத்து, தேனி ராஜவாய்க்காலை துார்வாறும் பணிகளை தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கென ஆட்சியர் ஷஜீவனா சிறப்பு நிதியும் வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தேனி சுடுகாட்டு பகுதியில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட், பங்களாமேடு வழியாக தாமரைக்குளம் செல்லும் ராஜவாய்க்காலை துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து தேனி நகராட்சி துணைத்தலைவர் அட்வகேட் செல்வம் கூறியதாவது: தேனி ராஜவாய்க்காலின் பெரும் பகுதி துார்வாரப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாவட்ட ஆட்சியரும் நிதி வழங்கி உள்ளார். பழைய பேருந்து நிலையத்திற்குள் ராஜவாய்க்கால் ஊடுருவி வருகிறது. இதனை உடைத்து துார்வார நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ராஜவாய்க்காலின் மற்ற பகுதிகள் துார்வாரப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் மட்டும் இந்த பணி பாக்கி உள்ளது. இங்கும் ஒரு வாரத்திற்குள் துார்வாரும் பணி முழுமையாக முடிந்து விடும். அதன் பின்னர் மழை பெய்தால், மழை வெள்ளம் எளிதாக ராஜவாய்க்கால் வழியாக தாமரைக்குளம் கண்மாய்க்குள் சென்று விடும்.

நகரின் மற்ற பகுதிகளில் தேங்கி மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாது. இதே போல் நகரின் இதர பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top