புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில், விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு, புதை சாக்கடை அமைத்தல் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (26.04.2022) நகர் மன்றத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: புதுக்கோட்டை நகராட்சியில் 2014 -ஆம் ஆண்டு முதல் புதை சாக்கடை திட்டம் செயலில் உள்ளது. தற்போது அந்த திட்டம் வார்டு எண் 1, 2, 3, 41 மற்றும் 42 ஆகிய வார்டுகளிலும் மற்றும் விடுபட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் ரூ.131.90 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், சண்முகா நகரில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், அடப்பன்குளம் அருகில் கழிவு நீரேற்று நிலையமும் கட்டப்படவுள்ளது. இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பு பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு வழங்கப்படும்.
101 கிலோ மீட்டர் திட்டத்திற்கு புதிய புதை சாக்கடை குழாய் அமைப்பதற்கும், வீட்டு குழாய் இணைப்பு வழங்குவதற்கும், விரிவான திட்ட மதிப்பீடு மேற்படி தொழில்நுட்ப நிறுவனம் மூலம் தயார் செய்து அரசு ஒப்புதல் பெற்று பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக பொதுமக்கள்; கருத்துகளை தெரிவிக்கலாம்.
கருத்து படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம். மேலும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளுக்கு நகராட்சி ஆணைய ருக்கு மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர் கவிதா ராமு.
இக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி ஆணையர் (பொ) சேகரன், நகர்மன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.