புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை பூமாலை வணிக வளாகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை வட்டாரங்களைச் சார்ந்த 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ஊரகத் தொழில்களை வளர்க்கவும் மேம்படுத்தவும் நுண், குறு, சிறு தொழில் முனைவோர்கள் (தனி நபர் மற்றும் குழுக்கள்), உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள்மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளை உருவாக்குகிறது. இத்திட்டம் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் மூலம் திறன் வளர்ப்பிற்கும் ஆதரவு தருகிறது.
மகளிர் வாழ்வாதார சேவை மையத்தின் மூலம் ஊரகத் தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு அல்லது மேம்படுத்துவதற்குத் தேவையான சேவைகளை ஒரே இடத்தில் சேவையை வழங்கி வருகிறது. மேலும் தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில் நுட்ப விவரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தைப் பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள் ஆகிய சேவைகள் மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் வழங்கப்படும். எனவே இச்சேவை மையத்தினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புதுக்கோட்டை இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் கீரனூர் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு வழங்கிய பசுமை விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மேலும் இரண்டு தொழில் முனைவோர்களுக்கு சிறு, குறு தொழில் முனைவோருக்கான உதயம் பதிவு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் ம. ஜெய்கணேஷ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, தொழில்முனைவு நிதி அலுவலர் மோகனா, தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் கனிமொழி, செயல் அலுவலர்கள் கிருபாகரன், ஜெகதீசன், வேத இளையராஜா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.