இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருக்கும்.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெப்பநிலை காணப்படும்.
வடகிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவிலும் சில தென்பகுதி களிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வழக்கமாக அடிக்கும் வெயிலைவிட கூடுதலாக ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
தென்னிந்தியாவில் ஆந்திர கடலோர மாவட்டங்கள், தெலங்கானாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்.
மார்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு பருவ மழை வழக்கம்போல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த மாதமே 33 டிகிரி செல்சியஸ் வெயில் அடிக்க தொடங்கியது. எனவே, கோடையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை நகரில் வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் நகரின் பல்வேறு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. எனினும் சாலைகளில் சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்,