அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபராகப்போகிறார் என்று பலரும் கூறிவந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராகவிருக்கிறார்.
ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவருக்குமிடையே நடந்த கடும்போட்டி நிலவி வந்ததால், பிரசாரத்தில் ட்ரம்புக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க். இந்நிலையில் இந்த வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய ட்ரம்ப், எலானுக்குத் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “இதுவரை யாரும் கண்டிராத இயக்கம் இது. வெளிப்படையாகச் சொன்னால், இது மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று நான் நம்புகிறேன். இப்போது, அது ஒரு புதிய முக்கியத்துவத்தை அடையப் போகிறது. ஏனெனில், நம் நாட்டை சரிப்படுத்த நாங்கள் போகிறோம். நம் எல்லைகளை நாங்கள் சரிசெய்யப் போகிறோம். நம்பமுடியாத அரசியல் வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். அமெரிக்கர்களுக்காக நாம் வரலாறு படைத்திருக்கிறோம்” என்று பேசினார்.
அப்போது எலான் மஸ்க் குறித்து பேசியவர், “எலான் ஒரு அற்புதமான மனிதர். அவர் நமக்காக அமெரிக்காவின் பல இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். எலான் மஸ்க், இன்று மிகப்பெரிய ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார். பென்சில்வேனியாவில் அவர் இரண்டு வாரங்கள் முழுமையாக நமக்காக செலவளித்தார். இந்த மிகப்பெரிய வெற்றிக்கு அவருக்கு முக்கியமான பங்கு உண்டு. அதனால்தான் நான் அவரை பெரிதும் மதித்து, நேசிக்கிறேன். லவ் யூ எலான்” என்று எலானை புகழ்ந்து பேசியிருக்கிறார்.