நமது அண்டை நாடான வங்கதேசம் எனப்படும் பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தை ஒடுக்குவதற்காக வீதியில் இறக்கப்பட்ட ராணுவம் ஆட்சியை பிடித்தது. பதவியை விட்டு இறங்கிய ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் வங்க தேசத்தில் இந்துக்கள் நடத்தி வந்த கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்து கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு சிறுபான்மை மக்களான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த நாட்டில் இயங்கி வரும் கிருஷ்ணபக்தி இயக்கமான இஸ்கான் அமைப்பின் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த அமைப்பினை தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் முகமது யூனுஸ்கான் தலைமையிலான ராணுவ அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும், வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான கரு. நாகராஜன் தமிழக போலீஸ் டிஜிபிக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களை கண்டித்தும். அதனை இந்த உலகில் உள்ள அனைத்து மனித நேயமிக்க மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று இதற்கான நிரந்தர தீர்வு பெறுவதற்காகவும் நடத்தப்பட இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன் என கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.