அவசரநிலை அறிவித்தது தொடர்பான விசாரணை நடந்து வருவதால், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் நாட்டை விட்டு வெளியே செல்வதற்கு, அந்த நாட்டின் நீதித்துறை தடை விதித்துள்ளது.
தென் கொரியாவில், பட்ஜெட் மசோதா தாக்கல் செய்வது தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் இயோல் கடந்த வாரம் அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியில் பல எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பார்லி கூடி, அவசரநிலையை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சில மணி நேரங்களிலேயே, அவசரநிலை அறிவிப்பை அதிபர் திரும்பப் பெற்றார்.
இதற்கிடையே அவரை பதவி நீக்கம் செய்ய பார்லி.யில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்காததால் அது தோல்வி அடைந்தது. வரும் வாரத்தில், பதவி நீக்க மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அவசரநிலை அறிவிக்கப்பட்டது தொடர்பாக, பார்லிமென்ட் குழு விசாரித்து வருகிறது. இதுகுறித்து, நீதித்துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது: சட்டங்களின்படி, பதவியில் இருக்கும் அதிபரை கைது செய்வதோ, விசாரிக்கவோ முடியாது. ஆனால், தேச துரோகம், கலகம் ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளில் விசாரிக்க முடியும். அதிபர் இயோல் திடீரென அவசரநிலை அறிவித்ததில் சதி ஏதும் இருக்குமா என, போலீஸ், தேசிய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அதனால், இது தொடர்பாக அவரிடம் எந்த நேரத்திலும் நேரடியாக விசாரிக்க வேண்டியிருக்கலாம். அதனால், அவர் நாட்டை விட்டு வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்