Close
ஏப்ரல் 3, 2025 4:26 காலை

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழக்கு விசாரணைக்காக   நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2020ம் ஆண்டு லஞ்சம், ஊழல் மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளின் பேரில் 3 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தொடங்கியது. இது அரசியல் காரணங்களுக்காக சொல்லப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் என அவர் அதனை மறுத்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரின் விளைவாக இந்த வழக்கு விசாரணை 2 மாதங்கள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் டிச. 2023 இல் தொடங்கியது.

நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யாவ் காலண்ட் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அக். 8, 2023 முதல் மே 20, 2024 வரை செய்த போர் குற்றங்கள் தொடர்பாக கைது செய்ய ஆணை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை, நவ. 21 அன்று வெளியிட்டது.

இது, நெதன்யாகு மீதான உள்நாட்டு வழக்கு விசாரணையை மேலும் சிக்கலாக்கியது. இதனைத் தொடர்ந்து, நவ. 24 அன்று நெதன்யாகுவின் சட்டக்குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்று அவரின் விசாரணையை 15 நாள்கள் தள்ளி வைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

பின்னர், விசாரணையை மேலும் தள்ளி வைக்குமாறு 12 அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி இந்த வழக்கு விசாரணை தெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள அறையில் இன்று நடைபெற்றது

அடுத்த 2 வாரங்களுக்கு, வாரத்திற்கு 3 முறை நெதன்யாகு சாட்சியங்கள் அளிப்பார் என்று இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிரிமினல் குற்றங்களுங்காக தண்டனை விதிக்கப்படும் முதல் இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு இருப்பார் என்றும், அவருக்குக் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top