Close
மார்ச் 4, 2025 2:22 காலை

டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலின் பின்னணி என்ன?

மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவது போல செயல்பட்டு, பல லட்சம் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் கடுமையாக சாடினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.  உலகமே அதிர்ச்சியில்  பார்க்கும் வகையில், இரு நாடு அதிபர்கள் வார்த்தை போர் செய்து கொண்டனர்.

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

உக்ரைனில் கனிம வளங்கள் குவிந்து கிடக்கிறது. இதனால், கனிம வளங்கள் உள்ளிட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஜெலன்ஸ்கியை அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது.  அந்த ஒப்பந்தத்தில் ‛ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உதவி செய்து வருகிறது. பல லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உக்ரைனில் உள்ள கனிமங்களில் 50 சதவிகிதத்தை அமெரிக்கா எடுத்து கொள்ளும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து ஆடிப் போன ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார்.

இதுவரை உக்ரைனுக்காக 350 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா செலவழித்துள்ளது. இதற்கு பதிலாக உக்ரைனிடம் ரூ.43 லட்சம் கோடி மதிப்பிலான கனிமங்களை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், இது சமாதான ஒப்பந்தத்திற்கு முக்கியமானது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இருப்பினும், ஜெலென்ஸ்கியின் தவறான நடத்தையை டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, அவரது நடவடிக்கை மூன்றாம் உலகப் போருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை காரசார விவாதமாக மாறியது.

நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். போரில் நீங்கள் வெல்லவில்லை. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது.

உக்ரைன் பெரிய சிக்கலில் உள்ளது, நீங்கள் அதை வெல்ல முடியாது. ஆனால் நீங்கள் எங்களுடன் இருந்தால், அதிலிருந்து வெளியேற உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை என்று உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இது போன்ற சென்சிட்டிவான சந்திப்பு மீடியா முன்னிலையில் நடந்திருக்க கூடாது. அதில் எங்களுக்கு பெரிய வருத்தம் தான் டிரம்ப் உடனான வார்த்தைப் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இறுதியில், நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

டொனால்ட் டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை ஜெலன்ஸ்கி விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இருப்பதை பயன்படுத்தி, அவர் பேரம் பேச நினைக்கிறார். அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்திலேயே அவர் அமெரிக்காவை அவமதித்துவிட்டார். அவர் எப்போது அமைதியை விரும்புகிறாரோ, அப்போது மீண்டும் அமெரிக்கா வரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடனான டிரம்பின் வளர்ந்து வரும் நல்லுறவை ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பினார், மேலும் புடினின் வாக்குறுதிகளை நம்புவதற்கு எதிராக எச்சரித்தார், இதனால் இந்த விவகாரம் ஒரு முழுமையான சர்ச்சையாக மாறியது. இந்த சூடான வாக்குவாதத்திற்குப் பிறகு, டிரம்ப் சந்திப்பை முன்கூட்டியே முடித்துக்கொண்டார், மேலும் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top