ரஷ்ய அதிபர் புடின் விரைவில் மரணமடைவார் என்றும், அதன் பிறகு போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையில் நீண்ட காலமாக போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் பேச்சுவார்த்தையில் ‘உடனடி 30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டது உக்ரைன். அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டனர்
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: தற்போது உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்கா உதவப் போவது கிடையாது. இது பெரிய ஆபத்தானது என நான் நினைக்கிறேன். அவருடைய வயதை வைத்து பார்க்கும்போது, புடின் சீக்கிரம் இறந்துவிடுவார். அது தான் உண்மை. அப்போது இந்தப் போர் நின்றுவிடும். அதற்கு முன்பு கூட போர் நிறுத்தத்தை எட்டலாம். புடின் மரணமடையும் வரை ரஷ்ய அதிபராக தொடர்வார். விரைவில் அவர் மரணமடைவார். அத்துடன் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
புடினின் உடல்நிலை மோசமடைந்துள்ளது போன்ற தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், ஜெலன்ஸ்கி இப்படி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.