Close
நவம்பர் 21, 2024 1:43 மணி

புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின்  30, 31 ஆவது சர்வதேச  கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதை பித்தன் தலைமையில் நடந்த தொல்லியல் கழக சர்வதேச மாநாட்டிற்கான வரவேற்புக்குழு ஆயத்த கூட்டத்தில் மாநாட்டிறகான இலச்சினையை வெளியிட்டனர்

புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின்  30, 31 -ஆவது சர்வதேச  கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழாவில்  தமிழக அமைச்சர்கள் பங்கேற்று  தொடங்கி வைக்கின்றனர்

தொல்லியல் கழக சர்வதேச மாநாட்டிற்கான வரவேற்புக்குழு ஆயத்த கூட்டம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க அலுவலகத்தில் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரா.சு. கவிதைபித்தன் தலைமையில்  நடந்தது.  இதில், மாநாட்டிறகான இலச்சினையை வரவேற்பு குழுவினர் வெளியிட்டனர்.

கூட்டத்தில் மாநாட்டு நிதிக்குழு தலைவர் ஜி.எஸ்.தனபதி , வரவேற்புக் குழுத்தலைவர் மருத்துவர் ச.ராமதாசு, தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆய்வு மைய மேலாண் அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் , மாநாட்டின் உள்ளூர் செயலருமான ஆ.மணிகண்டன் வரவேற்று பேசினார்.

புதுக்கோட்டை
லட்சினை

சிறப்பு அழைப்பாளராக தொல்லியல் கழக செயலாளர் பேராசிரியர் சு.ராஜவேலு கலந்து கொண்டு மாநாட்டின் பொருண்மை குறித்து பேசியதாவது:  தமிழகத் தொல்லியல் கழகம் 1991 -ஆம் ஆண்டு தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் துறைகளில் புலமைபெற்ற சான்றோர்கள் மற்றும்  தொல்லியல் அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

தொல்லியல் துறையில் ஈடுபடும் இளைஞர்களையும் ஆர்வலர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் புதியதாகக் கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள் மற்றும் தொன்மைச் சின்னங்கள் ஆகியவற்றை ஆய்வுலகம் அறியும் வகையில் அரையாண்டு இதழாக ஆவணம் என்ற இதழ் தொடங்கப்பட்டது.

அரையாண்டு இதழாக வெளிவந்த ஆவணம் மூன்றாம் இதழிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை வெளிவரும் ஆய்விதழாக மாற்றப்பட்டது.  முதல் கருத்தரங்கு 1993 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்தது . இதுவரை 29 கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன.   30 ஆவணம் இதழ்கள் வெளி வந்துள்ளன.

இக் கழகத்தில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மறைந்த அறிஞர்.நொபுரு கரோசிமா, ஸ்பென்சர் உள்ளிட்டவர்களும், வெளி மாநிலத்தை சேர்ந்த தொல்லியல் அறிஞர்களும் , தமிழகத்தை சேர்ந்த வரலாறு , தொல்லியல் அறிஞர்களும், ஆய்வாளர்களும் , ஆர்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

தொல்லியல் கழகத்திற்கு உலகம் முழுவதும் ஆயுள் உறுப்பினர்கள் 1200 பேர் உள்ளனர் . தமிழகத் தொல்லியல் கழகத்தின் 30, 31 -ஆவது கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீடு புதுக்கோட்டையில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசுவை சிறப்பு விருந்தினராகக் கொண்டு ,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையிலும் ,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் முன்னிலையிலும் ,  பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ,வர்த்தக பெருமக்கள், பல்துறை அலுவலர்கள், பொதுமக்கள்  வாழ்த்துதலோடும், மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  அவர்களின் ஒத்துழைப்போடும்  சர்வதேச தொல்லியல் அறிஞர்கள் பங்கேற்புடனும்  நடைபெறவுள்ளது.

தொல்லிடங்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் அறிஞர்கள் ஒன்றுகூடும் வாய்ப்பு  தற்போது கிடைத்துள்ளது. உலக தரத்திலான  தொல்லியல் ஆய்வுகள் தற்போது தமிழகத்தில் நடந்து வரும் சூழலில் இந்த மாநாடு தமிழக வரலாற்றிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்றார் பேராசிரியர் சு.ராஜவேலு.

இவ்வரவேற்பு குழு கூட்டத்தில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் , மேனாள் அருங்காட்சியக துணை இயக்குனர் ஜெ. ராஜாமுகமது, பேராசிரியர் விசுவநாதன், தொழிலதிபர் நிலாமணியன், பீர்முகமது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலர் எஸ்.டி பாலகிருஷ்ணன், தலைவர் வீரமுத்து , செயலாளர் முத்துக்குமார், ரகமத்துல்லா,மஸ்தான் பகுருதீன், புதுகைப்புதல்வன்,  தி.பிரபாகரன், மணவாளன், ஜெயபாலன், நாணயவியல் கழக தலைவர் பஷீர் அலி, ஆசிரியர் ரெங்கராஜன், சந்திரசேகரன், நாகராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும்   கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top