Close
நவம்பர் 23, 2024 5:33 காலை

சிவகங்கை மாவட்டத்தில் தொற்று நோய் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது என சிவகங்கை
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கொசு உற்பத்தியைத் தடுக்கவும், டெங்கு, சிக்குன்குனியா பன்றிக்காய்ச்சல் (AH1N1) மற்றும் புளு காய்ச்சல், தண்ணீரால் பரவக்கூடிய டைபாய்டு, மஞ்சள்காமாலை ஹெப்படைடிஸ் A மற்றும் இதர தொற்று நோய்களை தடுப்பதற்கு சுகாதாரத்துறை, கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி அமைப்புகளுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது மாவட்டத்தில் சளியுடன் கூடிய காய்ச்சல் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வட்டாரத்திலும் தினந்தோறும் மூன்று இடங்கள் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒர் இடம் என்ற விகிதத்தில் தினசரி 38 சிறப்பு பருவகால சுகாதார மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும், பருவமழை காரணமாக புளு காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதுடன் அந்தப் பகுதிகளில் தொற்றுநோய் தடுப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 1,199 இடங்களில் நடைபெற்ற மருத்துவமுகாம்களின் மூலமாக 45,492 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சளியுடன் கூடிய காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் இதுவரை 285 ரத்த மாதிரிகள் மாவட்டம் முழுவதும் பரிசோதனை செய்ததில், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதி மற்றும் பணிபுரியும் பகுதிகள், பள்ளி வளாகங்களிலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளான கொசுப்புழு ஒழிப்பு பணிகள், புகைமருந்து அடித்தல், மருத்துவ முகாம், ஒட்டுமொத்த துப்புரவுபணிகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தடுப்பு முன்தடுப்பு நடவடிக்கையாக டாக்சிசைக்ளின் மாத்திரைகளுகம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகளும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கிருமி நீக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சுகாதார களப்பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் நிலைகளில் குளோரினேசன் செய்வதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து உறுதிப்படுத்துவதுடன், ஏதேனும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து சரிசெய்ய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, காய்ச்சல் கண்டவர்கள் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், அரசு வழிகாட்டுதலின்படி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல்,
சமூக இடைவெளி பின்பற்றுவதை கடைப்பிடித்தல், கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் போன்ற நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்திடலும் வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top