அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை பட்டிமன்ற மாதிரி வடிவில் கோரிக்கையை முன்வைத்து பேசி நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடத்தினர்.
ஓன்றிய அரசு மாற்றுத் திறனாளிகளின் புதிய உரிமைச் சட்டம் 2016-ஐ செயல்படுத்தாததைக் கண்டித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, மதாந்திர உதவித்தொகையில் ஒன்றிய அரசின் பங்கை உயர்த்த மறுப்பதைக் கண்டித்து, நூறுநாள் வேலைத் திட்டத்தில் நிதியை சரிபாதியாக குறைத்ததைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளக்கான நலச் சங்கத்தின் சார்பில் இந்த நூதனப் பேராட்டம் நடைபெற்றது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வவர்கள் ஒரு அணியாகவும், அதை மறுப்பவர் ஒரு அணியாகவும் பட்டிமன்ற வடிவில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கு நடுவராக சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவாளன் செயல்பட்டார். வழக்கை தொடுக்கும் அணியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ், ஆர்.நிரஞ்சனா, எஸ்.மகாலெட்சுமி ஆகியோரும், மறுக்கும் அணியில் ஜி.கிரிஜா, எம்.சி.லோகநாதன், எஸ்.பாட்சபாய் ஆகியோரும் பேசினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கவேல், துணைத் தலைவர் கே.சண்முகம், பொருளாளர் ஜி.சரவணன் உள்ளிட்டோர் பேசினர். இதில் மாற்றுத் திறனாளிகள் திரளானோர் பங்கேற்றனர்.