Close
நவம்பர் 22, 2024 12:10 மணி

ஈரோடு அருகே மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமையாசிரியர் கைது

ஈரோடு

பெருந்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியை

ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ- மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21-ஆம் தேதி காய்ச்சல்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவன், தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறியுள்ளான். மாணவன் சொன்னதைக் கேட்டு  அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய்,  இது தொடர்பாக  ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு அளித்தார்.

இது பற்றி விசாரணை நடத்த கல்வி அதிகாரிகளுக்கு  ஆட்சியர்  உத்தரவிட்டார். பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் 6 மாணவர்களை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது.

மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதனையடுத்து மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இது குறித்து பெருந்துறை போலீஸில் புகார் அளித்தார்.

அதன் பேரில் பெருந்துறை போலீஸார் தலைமை ஆசிரியை மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியையை தேடி வந்தனர். இந்த நிலையில் பெருந்துறையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை  பெருந்துறை போலீஸார் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top