Close
நவம்பர் 22, 2024 11:42 காலை

நெற்பயிரை தாக்கும் பல்வேறு பூச்சி- நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை

நெற்பயிரைத்தாக்கும் இலைக்கருகல் நோய்

தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு, தண்டுதுளைப்பான்,புகையான்,குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் ஆகியவற்றின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள்; கட்டுப்படுத்திடலாம் என புதுக்கோட்டை மாவட்ட  வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

இலைச்சுருட்டுபுழு: இலைச்சுருட்டுபுழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறுபச்சையம் முழுவதும் சுரண்டப்பட்டநிலையில் பயிர் எரிந்ததுபோல் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலானபகுதிகளிலும் அதிகமாகஉரம் இடப்பட்டபகுதிகளிலும் மிகுந்துகாணப்படும்.

இதனைகட்டுப்படுத்திடஏக்கருக்குகுளோர்பைரிபாஸ் 20 ஈசி 750 மி.லி. ,குளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி. வரை,புளுபென்டையமைடு 39.45 ஈசி 40 மி.லி. வரை, பிப்ரோனில் 80 டபுள்யூஜி 25 கிராம் வரை இவற்றுள் ஏதேனும் ஒருமருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தண்டுதுளைப்பான்: குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்து வாடிக் காய்ந்துவிடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணிபால் பிடிக்காமல் சாவியாகி வெண் கதிர் களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.

இதனைகட்டுப்படுத்திடஏக்கருக்குகுளோரான்டிரானிலி புரோல் 24 எஸ்.சி 40 மி.லி.,கார்டாப் iஹட்ரோகுளோரைடு 50 சத எஸ்.பி400 கிராம் இவற்றுள் ஏதேனும் ஒருமருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

புகையான்: புகையான் என்பதுஒருதத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடிபோன்ற சிறிய இறக்கை களைக் கொண்டிருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்து   கொண்டு    நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது. இதனால் பயிர்கள் வட்ட வடிவில் திட்டுத் திட்டாகக் காயத் தொடங்கும். பின்னர் எரிந்து புகைந்தாற் போல் காணப்படும்.

மணிகளில் பால் பிடிப்பதற்கு முன்பாகவேகாய்ந்துவிடுவதால் மணிகள் முற்றாமல் பதராகிவிடும். வயல்களில் நீர் தேங்கியுள்ள இடங்களிலும்,வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். மேலும்,யூரியா போன்ற  தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப் பிரித்து இட வேண்டும். மேலும் புகையானின் தாக்குதல் அதிகமாகும் பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி.அல்லது தையோ மீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

குலைநோயின் அறிகுறிகள்: நாற்றங்காலில் தொடங்கி அனைத்துவளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற் பயிரைத் தாக்குகிறது. இலைகளின்மேல் பழுப்புநிறத்தில் சாம்பல் நிறமையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும். பலபுள்ளிகள் ஒன்றுசேர்ந்துபெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். இந்நோய் தீவிரமாகத் தாக்கும் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட் ரோபின் 23 எஸ்.சி. என்றமருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றைஒருஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

பாக்டீரியா இலைக்கருகல்: பொதுவாக இரவில் நிலவும் குளிர்ச்சி மற்றும் காற்றிலுள்ள அதிக ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா இலைக்கருகல் நோயானது ஆரம்பத்தில், இலையின் ஓரத்தில் வட்ட வடிவ மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும்.அவைகள் இணைந்து அளவில் பெரியதாகி, இலை முழுவதும் மஞ்சள் நிறமாக வைக்கோல் போன்று பழுப்புநிறக் காய்ந்த கோடுகளாகக் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் இலை முழுவதும் காய்ந்துவிடும்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருஏக்கருக்கு 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து,மறுநாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்துகைத் தெளிப்பான் கொண்டு    காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

மேலும்,தாக்குதல் அதிகமாகக் காணப்படின் காப்பர் ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகியமருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு  புதுக்கோட்டை வேளாண்துறை  இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top