Close
நவம்பர் 22, 2024 5:52 மணி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

ஈரோடு

ஈரோட்டில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்

ஆகவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடப்பதால் தேர்தலை இரத்து செய்ய கோரியும், தமிழகமுதல்வர் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என உறுதி அளிக்ககோரியும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக பன்னீர்செல்வம் பார்க் அருகே உண்ணா நிலை போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க் கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி  ஆகியோர் ஜனநாயகத்தை பாதுகாக்க ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி  மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் வே. ஈஸ்வரன் கூறியதாவது: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஈரோட்டில் திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் அதிகார துஷ்பிரயோகம் நடத்துவதாகவும் மக்களிடத்திலே பேசியிருக்கிறார்.

ஆனால் அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டே திமுகவை குற்றம் சாட்டுகிறது அதிமுகவால் திமுக அளவிற்கு பண விநியோகம் செய்ய இயலாத காரணத்தால் குற்றம் சாட்டுகிறார்களே ஒழிய தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்ற அக்கறை எடப்பாடி பழனிச்சாமிக்கு  இல்லை. அவர்  தோல்வி பயத்தால் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்.

அதிமுக கூட்டணியில் சட்டமன்றதேர்தலை சந்தித்த பாஜக சார்பாக போட்டியிட்ட அண்ணாமலை,  வானதி சீனிவாசன், எல்முருகன் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தந்தனர். அப்போது ஜனநாயகத்தை பேசாமல் இப்போது ஜனநாயகத்தை பற்றி பேசி தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தெலங்கானா சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக ஓட்டுக்கு பத்தாயிரமும் டி.ஆர்.எஸ்.கட்சி ஓட்டுக்கு ரூபாய் 6000 -ம் தந்து தேர்தலை சந்தித்தனர். பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அதிமுக ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும் அதிகார துஷ்பிரயோகம் நடத்துவதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் தற்போது அதிமுக செய்ததை விட பல மடங்கு அதிகார துஷ்பிரயோகத்தையும் பண விநியோகத்தையும் திமுக நடத்துகிறது. அதிகாரம் கையில் இருக்கும் போது அனைத்தையும் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது என்பதே இன்றைக்கு எதார்த்த அரசியல் ஆகிவிட்ட சூழ்நிலையில் ஒரு கட்சியை மட்டுமே குற்றம் சாட்டுவது இந்த பிரச்னைக்கு தீர்வாகாது

ஓட்டுக்கு பணம் என்ற அயோக்கியத்தனமான அரசியல் துடைத்தறியப்பட வேண்டும் எனில் அனைத்து அரசியல இயக்கங்களுக்கும் ஜனநாயக அக்கறை இருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான அழுத்தத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தை விட தங்களின் வெற்றியே பெரிதாக கருதுவதால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது ஒரு யுக்தியாக கருதப்படுகிறது. தான் கொடுத்து அடுத்தவரை தடுக்கவேண்டும் என்பதும் அடுத்தவர் கூட்டத்திற்கு போகாமல் இருக்க பணம் கொடுத்து அடைத்து வைப்பதும் புதுபுது யுக்தியாக பேசப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் நியாயமான ஆட்சியை விரும்புபவர்களும் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களும் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஒரு வேகம் உருவாகும் போது

தேர்தலில் அந்த மாற்றத்தை உருவாக்க முடியாது என்ற எண்ணம் அந்த இளைஞர்களுக்கு உருவாகும் போது சட்டமன்றங்களுக்குள்ளும் நாடாளுமன்றங்களுக்கும் முதலமைச்சர் முதல் கொண்டு அனைத்து அமைச்சர்களின் வீடுகளுக்குள்ளும் புகுந்து ஒரு ஆக்ரோஷ தாக்குதலை ஏற்படுத்தும் நிலை உருவாகும். இதற்கு இலங்கையே சாட்சி. அந்த நிலை உருவாகி விடக்கூடாது என்பது தான் நமது நோக்கமாக இருக்கிறது.

இந்த உலகத்தின் மிகப்பெரிய போர்கள் எல்லாம் நடைபெறும் போதும் ஒரு சில அடிப்படை விதிகளை ஒவ்வொரு நாடுகளும் கடைபிடித்து வருகின்றன.போர் வந்தாலும் கூட அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம், முதியோர்களை, குழந்தைகளை கொல்ல மாட்டோம் என்ற தார்மீக விதிகளை கடைப்பிடிக்கிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்

ஆனால் தமிழ்நாட்டில் தேர்தலில் கூட தார்மீக விதிகள், ஜனநாயக நெறிமுறைகள் என அனைத்தும் காலில் மிதித்து விட்டு வெற்றி பெற எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் தற்போதைய நியதி மற்றும் திறமை என்று ஆகிவிட்டது.

இந்த சமுதாயத்தின் மீது, நேர்மையான அரசியல் மீது, இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட பலர் ஆங்காங்கே இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டின் முதலமைச்சர் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளையும் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை அளிக்க கோரி ஒரு வலிமையான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதனை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஒரு புள்ளியாய் தொடங்குகிறது. அது கோடாய் மாறி கோலமாக மாற வேண்டும். நிச்சயம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் முந்தைய தேர்தலை விட கேவலமாகவும், அசிங்கமாகவும், அயோக்கியத்தனமாகவும் மாறிக் கொண்டே சென்றால் இது எங்கே போய் முடியும் என்று கவலை மட்டும் வந்தால் எந்த பயனும் இல்லை .

ஆகவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடப்பதால் தேர்தலை இரத்து செய்ய கோரியும்,  தமிழக முதல்வர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என உறுதி அளிக்க கோரியும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக பன்னீர்செல்வம் பார்க் அருகே உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்   வே.ஈஸ்வரன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top