Close
நவம்பர் 21, 2024 12:40 மணி

கடம்பூர் பத்திரிபடுகையில் பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

ஈரோடு

கடம்பூர் பகுதி , பத்திரிபடுகையில், கோவை - கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்திய பழங்குடியினரின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாம்

கடம்பூர்  அருகே  பத்திரிபடுகையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமை கோவை – கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்தியது.

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துடன் இணைந்து , சத்தியமங்கலம் கடம்பூர் பகுதி , பத்திரிப்படுகை கிராம மக்களுக்காக 7.3.2023 அன்று ‘ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமினை’ நடத்தியது .
முகாமில் , முதன்மை விஞ்ஞானியும் STC (Scheduled Tribe Component) திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான , முனைவர் து. புத்திரபிரதாப்  பங்கேற்று பேசியதாவது: இந்த விழிப்புணர்வு முகாமானது, ‘பழங்குடியின பிரிவிற்கான மேம்பாட்டு செயல் திட்டம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமலை பகுதியைச் சார்ந்த இராமரணை, பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை, மாவநத்தம், காளிதிம்பம் ஆகிய கிராமங்கள் மற்றும் கடம்பூர் பகுதியினைச சார்ந்த பத்திரிப்படுகை  கிராமத்தைச்  சேர்ந்த சுமார் 450 பழங்குடியினர் இத்திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள்.

மத்திய பிரதேச மாநிலத்தின் ‘லஹரி பாய்’ என்ற  27 வயதே நிரம்பிய பழங்குடியினப் பெண், 150 விதமான பாரம்பரிய சிறுதானியங்களை ‘விதை வங்கி’ மூலமாக காத்து, பாரதப் பிரதமரின் பாராட்டுகளை பெற்றதைக் குறிப்பிட்டு பேசிய அவர், பழங்குடியின மக்களின் அன்றாட உணவு முறையில் சிறுதானியங்கள் மீண்டும் இடம் பெற வேண்டும் என்றார் அவர்.

கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதி  பேசுகையில், பழங்குடியினரின் தேவைகளை அறிவியல்- பூர்வமாக கண்டறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், பழங்குடியின குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டி னை போக்கிட ஊட்டம் தரும் வீட்டுத் தோட்டம் அமைக்கும் தொழில் நுட்பங்களையும் ,

சிறு தானிய சாகுபடி முறைகளையும் அறிமுகம் செய்து, அதற்கான தரமான காய்கறி , சிறுதானிய விதைகளையும் வழங்கி, வீட்டுத் தோட்டம், சிறுதானிய சாகுபடி, சிறுதானியங்களிலிருந்து சுவையான உணவு தயாரிப்பது எப்படி போன்ற கையேடுகளும் வழங்கிடும் முழுமையான திட்டம் இது. இத்திட்டத்தில் இப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, இதனை திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
இம்முகாமில், ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை’ முன்னிட்டு, சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டு , திரவ நுண்ணுயிர் மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி என்று செயல் விளக்கம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதுநிலை விஞ்ஞானிகள், முனைவர் பி. மகேஷ் மற்றும் முனைவர் பி கீதா ஆகியோர் மக்காச்சோள சாகுபடி, சிறுதானிய சாகுபடி, வீட்டுத்தோட்டம் அமைத்தல் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர்.

முன்னதாக முகாமில் , பத்திரிப்படுகை கிராமத்து மக்கள் ‘ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை’ எடுத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து , ‘தேனீக்கள் மூலம் யானை – மனித எதிர்கொள்ளலை குறைக்கும் முயற்சிக்காக ’ தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டு அது குறித்த செயல் விளக்கம் நடத்தப்பட்டது.
பழங்குடியினருக்கு பண்ணைக் கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரேடியோ பெட்டிகள், திரவ வெல்லம் விதைகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.
நிறைவாக கிராம தலைவர் திரு மாதன் அவர்கள் நன்றி கூறினார். இம்முகாமில், தமிழக வனத்துறை அதிகாரிகள் , கரும்பு இனப்பெருக்கு நிறுவன அலுவலர்கள் மற்றும் திரளான பழங்குடியின மக்கள் பங்கேற்றனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top