துல்லிய பண்ணைய சொட்டுநீர் பாசன முறையில் ஓர் புதிய தொழில்நுட்பம் “சுவார்” குறித்து விவசாயிகளுக்கான செயல் விளக்க முகாம் நடைபெற்றது
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்திய பாசன நீர் சிக்கன தொழில்நுட்ப செயல் விளக்கம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூழையன்காடு டி.சின்னதுரை மற்றும் குப்புடையான்பட்டி எஸ்.தேவி ஆகியோரின் கொய்யா மற்றும் பப்பாளி தோட்டத்தில் நடைபெற்றது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தனது அறிமுக உரையில், மாறிவரும் பருவகால மாற்றத்தினால் மண் மற்றும் தோட்டக்கால் பயிர்களில் ஏற்படும் நீர் சிக்கனத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, துல்லியப்பண்ணைய தொழில்நுட்பங்களில் முதன்மையான சொட்டுநீர்பாசன முறையை மேலும் திறனுள்ளதாக மாற்றும் வகையில் “சுவார்” என்னும் “வேளாண் உயிர்பித்தலுக்கான நீர் மேலாண்மை முறை” தொழில்நுட்பம் ஐதரபாத்தை மையமாகக்கொண்டு செயல்படும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்ட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை தற்போது வயலில்செயல்பட்டு கொண்டுள்ள சொட்டு நீர்பாச குழாய்களுடன் இணைந்து செயல்படுததுவதால் 40 சதவிகிதம் வரை பாசன நீரை மேலும் சேமிப்பு செய்யலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பரிட்சாத்த முறையில் 10 விவசாயிகள் தோட்டத்தில் செய்து பார்த்து விவசாயிகளின் பிண்ணூட்டம் மற்றும் ஆலோசனைகளுக்கு பின்பு மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார் ராஜ்குமார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய இயக்குநர் கே.எஸ்.கோபால் பேசுகையில் “சுவார்” அமைப்பை ஏற்கெனவே உள்ள சொட்டு நீர் பாசன குழாயில் இணைப்பதன் மூலம் தண்ணீர்பயன்பாடு சுமார் 40 சதவிகிதம் வரை குறையும். இந்த “சுவார்” கருவியின் ஒருபுறமானது சொட்டுநீர்ப்பாசன பக்கக் குழாயுடன் இணைக் கப்பட்டு, “குவார்ட்ஸ்” கற்கள் பொருத்தப் பட்ட மறு பகுதியா னது பயிரின் வேர்ப்பகுதியின் ஊடுருவும் தன்மையின் ஆழத்திற்கேற்ப பொருத்தப்படுகின்றது.
இதனால் நீர்த் துளிகள் உறிஞ்சு வேரின் அருகிலேயே விழுகின்றது. இதன் மூலம் பாசனநீர் வீணாவது தவிர்க்கப் பட்டு நீர் சேமிக்கப்படுகின்றது. மண்ணின் ஈரப்பதத்தை அறிந்து பாசன நீரை அளிப்பதன் மூலம் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுவதோடு அதிக மகசூல் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாட்டுத்திறன் மேம்படுத்தப்படுகின்றது. மா, கொய்யா, சப்போட்டா, பப்பாளி போன்ற நீண்ட நாள் வயதுடைய பயிர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகச் சிறந்ததாக அமையும் என்றார்.
இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. செயல்விளக்கத்தின்போது ஒருங்கிணைப்பாளர் அஜய் ஜக்கோஜீ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பி.மணிகண்டன், செல்வமுகிலன் ஆகியோர் சுவார் தொழில்நுட்பத்தை செயல் விளக்கமாக செய்து காட்டினார்.
பெஸ்ட் நிறுவன இயக்குநர் அதியமான் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். தொழில்நுட்ப அலுவலர் கோபால் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் விமலா அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் வினோத்கண்ணா நன்றி கூறினார்.