Close
நவம்பர் 25, 2024 6:43 மணி

குற்றச் செயல்களைத் தடுக்கத் தவறிய காவல்துறை: சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை

காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை நகரத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கத் தவறிய காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழுக் கூட்டம் நகரக்குழு உறுப்பினர் கணேஷ் தலைமையில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜ், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

புதுக்கோட்டை நகர எல்லைக்குள் நகரக் காவல்நிலையம், கணேஷ்நகர், திருக்கோகர்ணம் ஆகிய மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களை நம்பித்தான் மக்களின் பாதுகாப்பு உள்ளது. இந்தக் காவல் நிலையங்களில் பல நேரங்களில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கத் தவறியதாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதை தடுக்க திராணியற்று இருப்பதாகவே காவல்துறையினரின் செயல்பாடு உள்ளது.

சமூகக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்ய மறுப்பது, அலைக்கழிப்பது, பணம் படைத்தவர்கள், அரசியல் பின்னணி உள்ளவர்களுக்கு அடிபணிவது உள்ள போக்குகளும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையிலும் பொதுமக்களின் இத்தகைய குற்றச்சாட்டு களில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. மேலும், மேற்படி காவல் நிலையங்களில் உள்ள காவலர்களின் கணிசமான இடங்கள் காலியாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

எனவே, மேற்படி காவல்நிலையங்களுக்கு வரும் பொது மக்களை அலட்சியப்படுத்தும் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், நீதியை எதிர்பாத்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு காவல்துறையினர் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top