புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையி னர் வியாழக்கிழமை காலை கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
வழக்கம் போல ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் மீனவர்கள் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இதில் தமிழரசன் (39) என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் அவருடன் பாஸ்கர் (40), முத்துராஜா (25), அமரன் (30), ஜெகன்நாத் (35), குமார் (43) மற்றும், உதயகுமார் (60) என்பவ ருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன் ரவீந்திரன் (40), உலகநாதன் (35), வைத்தியநாதன் (27) அருள்நாதன் (23), குமரேசன் (35).
அகிலா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரது கணவர் காளிமுத்து (45), அர்ஜுனன் (50) குமார் (42), குருமூர்த்தி (27), அருண் (22) ஆகிய 17 மீனவர்கள் நெடுந்தீவு அருகே வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர்.
இவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோரை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற இலங்கைக் கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற எங்கள் பகுதியின் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே போகிறது. ஏற்கனவே மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்படைய செய்யும். இதனால் அந்த மீனவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் வேதனையில் மூழ்கியுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post Views: 297