ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வரும் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் 300 மஞ்சப்பை வைக்கப்பட்டுள்ளது. ஒரு மஞ்சப்பையின் விலை ரூ.10 ஆகும். இதில் ஒரு ரூ.10 நாணயம் அல்லது இரண்டு ரூ.5 நாணயம் என எவ்விதத்தில் செலுத்தினாலும் மஞ்சப்பை கிடைக்கும். நாணயம் இல்லாவிட்டால், பணத்தாள் பயன்படுத்தலாம். இதில் ரூ.10 பணத்தாள் அனுப்பினால் ஒரு மஞ்சப்பை கிடைக்கும்.
எனவே பொதுமக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கு.செல்வக்குமார், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் (பொது) முருகப்பன், உதவிப் பொறியாளர்கள் இரா.தாரணி, மூ.வெங்கடசுப்ரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.