Close
நவம்பர் 25, 2024 4:18 காலை

குறுவை சாகுபடிக்காக தூத்துக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த 1306 டன் உரங்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த உரங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1306 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் குறுவை நெல் நடவு, நெற்பயிருக்கு மேலுரம் இடுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு ஆகியவற்றில் உள்ள நீர் இருப்பினை பயன்படுத்தி விவசாயிகள் மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

எனவே, குறுவை பருவ நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் யூரியா 5226 மெட்ரிக் டன்கள், டிஏபி 1743 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 756 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 4947 மெட்ரிக் டன்கள் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் 604 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 702 மெட்ரிக் டன்களும், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்றது.

இவைகள் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதனை வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

இதில் தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குநர் மு. மதியழகன், வேளாண் அலுவலர் சி. முகமது ரபி மற்றும் ஸ்பிக் நிறுவன பிரதிநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை ஆய்வு:.  உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரக்கட்டுபாட்டு ஆணை 1985 இன்படியும் மேலும், உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973இன்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

எனவே, மாவட்டத்திலுள்ளள சில்லரை உர விற்பனையாளர் கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது. மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது.

உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும் உரங்களை விற்பனை செய்வதும்; கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top