Close
நவம்பர் 22, 2024 11:29 காலை

சிஐடியு போராட்டத்தால் புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர் களுக்கு 41 % ஊதிய உயர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நகராட்சி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்தைக்குப் பின் தொழிலாளர்களுடன் சிஐடியு நிர்வாகிகள். 

புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 41 % ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள நிகழ்வு தாங்கள் முன்னெடுத்த  போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என சிஐடியு தொழில் சங்கம் கூறியுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்கள், ஓட்டுநர்களுக்கு போதிய  ஊதியம் வழங்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.  இவர்களின் ஊதிய உயர்வுக்காகவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் சிஐடியு சங்கம்  தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தி வந்துள்ளது.

இந்நிலையில், ஊதிய உயர்வு கேட்டு கடந்த கடந்த சனி, ஞாயிறுகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனைத தொடர்ந்து நிர்வாகத்தின் சார்பில் நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி மற்றும் அதிகாரிகள் சிஐடியு மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரீதர், புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் முத்தையா உள்ளிட்டோருடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.460, ஓட்டுனர்களுக்கு ரூ.547 ஊதியம் வழங்குவது எனவும், இஎஸ்ஐ, பிஎப், காப்பீடுகளுக்கான தொகைகளை நிர்வாகமும், தொழிலாளியும் இணைந்து செலுத்துவது, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வாரத்தில் இரண்டு அரை நாட்கள் வழங்குவது என எழுத்துப் பூர்வமான உடன்பாடு ஏற்பட்டது. மேற்கண்ட ஊதிய உயர்வு என்பது ஏற்கெனவே அவர்கள் வாங்கி வந்த ஊதியத்திலிருந்து 41 %  கூடுதலாகும்.

இதுகுறித்து உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா கூறுகையில், இது சிஐடியு சங்கம் நடத்திய தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். மேலும், பண்டிகைகால முன்பணம் உள்ளிட்ட இதர கோரிக்கைகளையும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாக வென்றெடுப்போம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top