புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவப்பூர் செல்லும் சாலையில் புதை சாக்கடையை சீரமைக்கும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், ரயில் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரிகளில் இருந்து நெல் மூட்டைகள் சாலையில் விழுந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருவப்பூர் செல்லும் பிரதான சாலையில் அமைக்கப்பட்ட புதை சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியினை நகராட்சி பணியாளர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளனர்.
ஆனால் அந்தப் பணிகளை முழுமையாக முடிக்காமல் பாதாள சாக்கடை பள்ளங்களின் மூடிகள் திறந்தே கிடப்பதால் அதில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அந்த சாலையின் வழியாக புதுக்கோட்டை ரயில் நிலையத் திற்கு நெல் மூட்டைகளை கொண்டு சென்ற லாரிகள் பள்ளங் களில் சிக்கி ஆங்காங்கே இருந்தன.
இதில் லாரிகளில் ஏற்றி செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் சாலையில் விழுந்து சிதறியதால் அவற்றைக் கண்ட விவசாயி களும் பொதுமக்களும் வேதனை அடைந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட புதை சாக்கடை பள்ளங்கள் மூடப்படாததால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: ரயில் நிலையத்திலிருந்து காட்டு மாரியம்மன் கோயில் திருவப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் இந்த பிரதான சாலையின் வழியே நாள்தோறும் அதிக அளவிலான பள்ளி, கல்லூரி வாகனங்கள், தண்ணீர் வண்டிகள் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரயில் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளும் பல ஆண்டுகளாக இந்த சாலையின் வழியாக தான் சென்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் புதை சாக்கடை அடைப்பை எடுப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக நகராட்சி பணியாளர்கள் மூடாததால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இன்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கிக்கு நெல் மூட்டைகள் சாலைகளில் சிதறி விழுந்த சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளதாகவும் இனியாவது நகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் போர்க்கால நடவடிக்கை எடுத்து புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதோடு இந்த பிரதான சாலையை விரிவாக்கம் செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.