Close
செப்டம்பர் 20, 2024 7:35 காலை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டை

அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் தர மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராசநாயக்கன்பட்டி மற்றும் காவேரி நகர் ஆகிய இரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் தேசிய தரக்  காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது. இதற்காக மாநில அளவிலான ஆய்வு குழுக்கள் ஆண்டுதோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்யும். இந்த சான்றிதழை பெறுவதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த ரொக்க விருதில்  25 சதவீதம் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். 4-வது ஆண்டில், சுகாதாரம்  மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு குழு, தேசிய தர  காப்பீட்டு சான்றிதழுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சான்றிதழை புதுப்பித்தல் மற்றும் உயர் உதவிக்காக ஆய்வு செய்யும்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிறந்த மருத்துவ மனைக்கான தரச்சான்றிதழ் வழங்கி, நிதியுதவியையும் அளித்துள்ளனர்.
தற்போது, விராலிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த ராசநாயக்கன்பட்டி மற்றும் அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த காவேரி நகர் ஆகிய இரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுப் பணிகள் கடந்த ஆக. 30ஆம் தேதி தொடங்கி, செப். 2ஆம் தேதி நிறைவடைந்தது.
ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் யாதையா ஆலுகோன்டா, பாட்னாவைச் சேர்ந்த டாக்டர் ப்ரீத்தி சின்ஹா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இதில் மருத்துவ மனையின் சுகாதாரம், மருந்து இருப்பு, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மகப்பேறு சிகிச்சை, கடந்த ஓராண்டாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரம், மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, புதுக்கோட்டை துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ராம் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் நல்லபெருமாள், ராகவி  உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top