Close
நவம்பர் 25, 2024 2:06 மணி

வாக்குச்சாவடி உறுப்பினர்கள் வீடு வீடாக திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி

ஈரோடு

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் திமுக ஆட்சியின் அவலம் குறித்து வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தினார்.

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு  மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி.சி.ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, பூந்துறை பாலு முன்னிலை வகித்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட அம்மா உணவகம், மினி கிளினிக் திட்டம், மாணவருக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. கேட்டால் நிதி இல்லை என்கிறார்கள்.

முன்பு தமிழகத்தில் டாஸ்மாக் பார்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் அரசின் கஜானாவுக்கு மட்டுமே சென்றது. ஆனால் இப்போது டாஸ்மாக் பார்களின்  வருமானம் முழுவதும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குத் தான் செல்கிறது.

உதாரணத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் முன்பு 120 டாஸ்மாக் பார்கள் இருந்த போது டெண்டர் எடுத்த 100 பார்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அரசாங்கத்திற்கு முழுமையாகச் சென்றது. ஆனால் இப்போது மாவட்டத்தில் உள்ள 120 பார்களின் வருமானமும் ஸ்டாலின் வீட்டுக்குத் தான் செல்கிறது.

அதுமட்டுமல்ல ஈரோடு மாநகராட்சியில் 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பஞ்சமே வரக்கூடாது என்பதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினோம். அந்தத் திட்டத்தையும் செயல்பட விடாமல் முடக்கி விட்டனர்.

இதன் காரணமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய சேமூர், சூரம்பட்டி போன்ற பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை.
அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்குவதாகக் கூறிவிட்டு இப்போது தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே  உரிமைத் தொகை வழங்குவதாகக் கூறி திமுக மக்களை ஏமாற்றுகிறது. உண்மையில் திமுகவைச் சேர்ந்த மகளிருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப் பட்டுள்ளது.

இப்படி மக்களுக்கு எதிரான செயல்களை செய்து வரும் திமுக அரசின் செயல்பாடுகளைப் பற்றி பிரசாரம் செய்து வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் புதுச்சேரி உள்பட  40  தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற பூத் கமிட்டி உறுப்பினர்களான நீங்கள் பாடுபட வேண்டும் என்றார் கே.வி.ராமலிங்கம்.

ஈரோடு
கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி பேசியதாவது:
தற்போதைய திமுக ஆட்சியின்மீது மக்களுக்கு  மிகப்பெரிய அளவில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் எப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக உள்ளனர். அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.

அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகள் தவறாமல் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அவர்களது பெயர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டியது பூத் கமிட்டி உறுப்பினர்களின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அதிமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களில் 50 முதல் 100 பேரின் பெயர்கள் விடுபட்டதால் தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

இந்த காரணத்தால் கடந்த சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து விடுபட்ட அதிமுக வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க பூத் கமிட்டி உறுப்பினர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு நாம் கஷ்டப்பட்டால் 5 ஆண்டு களுக்கு நாம் பலனடைய முடியும்.

தற்போதைய திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி தினமும் 10 முதல் 15 வீடுகளுக்குச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்தாலே நாடாளுமன்றத் தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியும்.

அதிமுகவுக்கு சாதகமான புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இந்தப்பணிகள் சரியாக நடக்கிறதா என்பதை கட்சியின் மேலிடம் கண்காணிக்கும்.கடந்த மக்களவை தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 8,000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றதால் தான் தோல்வியைத் தழுவினோம். இம்முறை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிமுகவின் வாக்குகளை சேகரித்தாலே எளிதில் வெற்றி பெற முடியும் என்று தங்கமணி பேசினார்.

#செய்தி- மு.ப.நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top