Close
நவம்பர் 22, 2024 6:02 காலை

பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் : கட்சித்தலைமையை வலியுறுத்திய ஈரோடு மதிமுக

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி

கூட்டணி கட்சியுடன் சேர்ந்து தனித்துவத்தை இழந்து விடக்கூடாது என்று  ஈரோடு மாநகர மாவட்ட மதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அரசியல் வட்டாரதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் மக்களவைத் தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்களின் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள மதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் என்.முருகன் தலைமை வகித்தார்.ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் குழந்தைவேலு, நாமக்கல் மாவட்ட செயலாளர் கணேசன், தொண்டரணி நிர்வாகி முசிறி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக நிர்வாகிகள். சிலர் பேசும் போது, அண்மைக் காலமாக மதிமுகவைச் சேர்ந்த நாம் தோழமைக் கட்சியா திமுகவுடன் கூட்டணி வைத்து அவர்களின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மதிமுக தன்னுடைய தனித்துவத்தை இழந்து வருவதுடன் கட்சியின் சின்னமான பம்பரம் சின்னத்தையே மக்கள் மறந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. நமக்கான தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.

ஈரோடு
ஈரோடு மதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

இந்த நிலை மாற வேண்டுமானால் வரும் தேர்தலில்பம்பரம்  சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.கடந்த மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலும் நம்முடைய கட்சியினர் மாற்று சின்னத்தில் போட்டியிட்டதால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு மரியாதை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை நீடித்தால் அதுவே கட்சியின் வீழ்ச்சிக்கும் வழி வகுத்து விடும். எனவே மதிமுக வின் தனித்துவத்தை மீட்க வேண்டுமானால் வரும் தேர்தலில் நம்முடைய சின்னமான பம்பரம் சின்னத்தில் தான் நம் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் உரிமை குரல் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து ஈரோடு நாடாளுமன்ற எம்.பி.கணேச மூர்த்தி பேசும்போது, நம் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

நம் கட்சியினர் பலரும் கட்சியின் செயல்பாடுகளையோ கட்சி நடத்தும் கூட்டங்களிலும் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வதில்லை. பலரும் சொந்த வேலையாகச் சென்று விடுகிறீர்கள். இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்? வரும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்களாக பணியாற்ற நம் கட்சியைச் சேர்ந்தவர்களில் எத்தனை பேர் முன் வருவார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

அதேசமயம் கூட்டணி கட்சியானதிமுக ஒரு மாபெரும் இயக்கம் என்பதால் நாம் அவர்களை அனுசரித்து தான் சென்றாக வேண்டும். நம் கட்சியின் சின்னத்தில் நிற்க எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

ஆனால் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டவர்களாக தான் இருக்கிறோம். இதனையும் கட்சி நிர்வாகிகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் குமாரபாளையம் நகரச் செயலாளர் நீலகண்டன், நகர பொருளாளர் ஆர்.பி. பழனிவேல், நாமக்கல் மாவட்டப் பிரதிநிதிகள் வி.நடராஜன், சுப்பிரமணி உள்ளிட்ட ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களும் செயல் வீரர்களும், மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி கழகத்தின் நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

# செய்தி- ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top