Close
அக்டோபர் 5, 2024 8:06 மணி

அரசின் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு கூலி உயர்வு… காத்திருக்கும் நெசவாளர்கள்…

ஈரோடு

கடந்த 4 ஆண்டுகளாக இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு கூலி உயர்வு இல்லாத நிலையை அறிந்து நடப்பு பேரவை கூட்டத்தொடரில்  முதல்வர் ஸ்டாலின் கூலி உ.யர்வை அறிவிக்க வேண்டுமென  நெசவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்த்தப்படாத நிலையில் இம்முறை 30 சதவீத கூலி உயர்வை நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர் பா. கந்தவேல் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழிலில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி மூலம் 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் 228. கூட்டுறவு விசைத்தறி நெசவாளர் தொடக்க சங்கங்களில் 68,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் இலவச வேட்டி சேலை திட்டம்,பள்ளி சீருடைத் திட்டத்தின் கீழ் நெசவு செய்து துணிகளை உற்பத்தி செய்கின்றனர்.
இலவச வேட்டி சேலை உற்பத்தி திட்டம் மூலம் பல லட்சம் விசைத்தறித் தொழிலாளர்களும், விசைத்தறியாளர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெற்று வருகிறார்கள்.
தற்போது உள்ள தரம் மற்றும் வடிவத்தில் வேட்டி சேலை 2010-11 -ஆம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கிய போதுவேட்டி உற்பத்தி செய்ய கூலியாக 16.00 ரூபாயும் , சேலை உற்பத்திக்கு ரூ.28.16 பைசாவும், 2011-2012 ஆம் ஆண்டு வேட்டி உற்பத்திக்கு ரூ.18.40ம், சேலைக்கு ரூ.31.68ம், 2012 -2013 ஆம் ஆண்டில் வேட்டிக்கு ரூ.20.40ம், சேலைக்கு ரூ.31.68ம், அதனைத் தொடர்ந்து,

கடந்த 2015-16 ஆம் ஆண்டு வேட்டிக்கு ரூ. 21.60ம்,சேலைக்கு ரூ.39.27ம் கூலியாக நெசவாளருக்கு நிர்ணயம் செய்யப் பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆண்டு வேட்டிக்கு ரூ. 24.00 ம், சேலைக்கு ரூ.43.00  என்று கூலி உயர்த்தி கொடுக்கப்பட்டது.. 2019 -ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை நெசவுக்கான கூலி உயர்த்தப்படவில்லை.

திமுகவின் தேர்தல் அறிக்கைஎண் 146 ல் தெரிவித்தது போல
விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளிக்கும் என்ற வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் கடந்த 4 ஆண்டுக்கு முன் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி திட்டத்திற்கு கூலி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பின் எவ்வித மாற்றமும் இல்லாமல் பழைய கூலியே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய கால சூழலுக்கும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப விசைத்தறி தொழில் சார்ந்த அனைத்து நேரடி மற்றும் மறைமுகதொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு, குடோன் வாடகை,மின்சார கட்டணம், விசைத்தறி சார்ந்த உதிரி பாகங்கள் விலை உயர்வு,எலக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வு,எங்கள் துறை சார்ந்த நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வரும்தச்சு வேலைப்பாடு செய்பவர்கள்,லேத் வேலைப்பாடு செய்பவர்கள்.

ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உணவு சார்ந்த அனைத்து துறையிலும் தங்களுடைய கூலியை உயர்த்தி உள்ளார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட கூலியை வைத்து விசைத்தறி நெசவாளர்கள் வேட்டி சேலை உற்பத்தி செய்வது என்பது கடினமான பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு கூலி உயர்வு தொடர்பாக கைத்தறித் துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.அவர் இந்த வருடம் செய்ய இயலாது அடுத்த வருடம் பொங்கல் திட்டத்தில்கூலி உயர்வு தொடர்பாக முடிவு செய்வதாக தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு விசைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைத்தும் தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல 750 லிருந்து 1000 யூனிட் இலவச மின்சார சலுகை அளித்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றியதைப் போல தற்போது விசைத்தறியில் நெசவு செய்யப்படும் தமிழக அரசின் வேட்டி சேலை திட்டத்திற்கும் 30 சதவீதம் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே முதல்வர் அறிவிக்க வேண்டும் என நெசவாளர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# செய்தி- மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top