Close
ஏப்ரல் 4, 2025 12:55 மணி

மாமன்னர் மருதுபாண்டியர் 222 -ஆவது ஆண்டு நினைவு நாள்..

சிவகங்கை

மருது சகோதரர்கள்

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர்க்குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 அன்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்கள் பிறப்பித்த போர்ப் பிரகடனம், என்றும் அவர்கள் வீரத்தைப் பறைசாற்றும். காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி என ஆன்மீகத் திருப்பணிகளில் சிறந்து விளங்கியவர்கள்.

தங்கள் உயிரையும் துச்சமென மதித்துத் தியாகம் செய்து, தேச விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் வீரத்தையும் புகழையும் போற்றுவோம்.

மருதுசகோதரர்களை பற்றி கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கில அதிகாரி ராணுவ நினைவுக் குறிப்புகள்’ என்ற நூலில் மருது சகோதரர்களை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

மருது சகோதரர்களுடன் நெருங்கிப் பழகியவர். மருது சகோதரர்களைப் பற்றி வெல்ஷ் மிகவும் வியந்து சொல்கிறார். பெரிய மருதை, பொதுமக்கள் வெள்ளை மருது என்றே அழைத்து இருக்கிறார்கள். பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல்வலிமை கொண்ட பெரிய மருது, நாணயத்தை விரல்களால் வளைக்கக்கூடிய வலிமை கொண்டவர். ஐரோப் பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர்.

புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது, தேர்ந்த திறமைசாலி. அவரது தலையசைப்பை மக்கள் சட்டமாக மதித்தனர். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூட கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம். வெளியே வரலாம். அன்போடும் பண்போடும் பேசிப் பழகக்கூடியவர்.

மருதுசகோதர்களிடம் இருந்துதான் வேல் வீசவும், களரி சுற்றவும் கற்றுக் கொண்டேன்’ என்று கூறும் வெல்ஷ், சின்ன மருதுவோடு மிகுந்த நட்பாகப் பழகியதுடன் தன்னை அவர் மிகவும் அன்போடு நடத்தியதோடு, ஒவ்வொரு முறையும் தனக்காகத் தனிச் சுவைமிக்க ஆரஞ்சுப் பழங்களைக் கூடை கூடையாகப் பரிசு தருவது வழக்கம் என்று தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

1801-ம் ஆண்டு மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைப் பிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக ராணுவ மன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டு உடனே தூக்கிலிடப் பட்டனர். மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு, திருப்தியடையாத ஆங்கில அரசு, ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, துரைச்சாமி என்பவர் உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால், 1000 கூலிச் சக்கரங்கள் பரிசாக வழங்கப்படும் என்று, கர்னல் அக்னியூ 1801 அக்டோபர் 1-ல் சிவகங்கையில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். ஆங்கிலேயர்களிடம் பிடிபட்ட துரைச்சாமி, மருதுவின் தளபதிகள் மற்றும் உடனி ருந்த முக்கிய வீரர்கள் என 72 பேர், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப் பட்டனர். இதில் துரைசாமி என்பவர் வயது வெறும் 15.

நாடு கடத்தப்பட்ட அந்தக் கைதிகளில் நடக்கக்கூட முடியாத அளவில் சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டு களைக் கை விலங்கில் தொங்கவிட்டு இருந்தனர். ஏனென்றால், கைதானவர்களில் முக்கியமானவர் முத்துவடுகு என்ற துரைச்சாமி.

17 வருடங்கள் கழிந்தது..

பினாங்கின் முதல் கவர்னராக இருந்த சர் பிரான்சிஸ் லைட்டின் மகளைத்தான் வெல்ஷ் திருமணம் செய்திருந்தார். கட்டபொம்மனை அழித்த மேஜர் பேனர்மென், பினாங்கில் அதிகாரியாக இருந்தார். அவர் ஒரு கிறிஸ்தவ சபையைக் கட்டிக் கொண்டு இருந்தார்.

அந்த கட்டடப் பணிக்கு கைதிகள் அழைத்து வரப்பட்டார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவராக உடல் மெலிந்து ஒடுங்கிய நிலையில் இருந்தார் துரைச்சாமி. அந்த திருச்சபையைப் பார்வையிட வந்திருந்த வெல்ஸை சந்தித்தார் துரைச்சாமி.

அவன் முன்னால் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க, முகத்தில் சுருக்கமும், உடல் வளைந்தும் நோயால் இளைத்தும் காணப்பட்ட ஒருவர் அவன் முன் வந்து நிற்கிறார்.33 வயதில் 60 வயது முதுமை துரைசாமிக்கு.

‘யார் நீ?’ என்கிறான் வெல்ஷ். அந்த முதியவர் பதில் சொல்ல முடியாமல், தலைகுனிந்து கண்ணீர் அரும்ப நிற்கிறார். பிறகு ‘நான் தான் துரைசாமி சின்ன மருது மகன்” என்கிறார். திகைத்துப் போகிறான் வெல்ஷ்.

ஆம் அந்த துரைசாமி சின்னமருதுவின் மகன் தான். வெல்ஸால் தன் முன்னே நிற்கும் மனிதனை நம்பவே முடியவில்லை..பலமுறை சின்ன மருதின் அரண்மனைக்குச் சென்று விருந்துண்டவன். சின்ன மருதுடன் வேட்டைக்குச் சென்றவன். சின்ன மருதுவிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டவன். நண்பனின் மகனைப் பார்த்து ‘நீயா?!’ என்கிறான் அந்த அதிகாரி.

அவன் மனம் துன்பத்தில் ஆழ்கிறது. 15 வயதுச் சிறுவனாகக் கப்பல் ஏற்றிய அதிகாரி அவன்தான். தனது நண்பன் சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியா இந்த நிலையில் இருக்கிறார் என் நெகிழ்ந்துபோய் அவரோடு அன்பாகப் பேசியிருக்கிறான். உனக்கு நான் என்ன செய்ய முடியும்?’’ என்ன வேண்டும் என கேட்கிறான் வெல்ஷ்..

ஒரு கடிதம். அதை ஊரில் உள்ள என் உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் சமாச்சா ரத்தை அவர்கள் அறிய வேண்டும் என்கிறார்..‘‘அது முடியாது. அது என் உத்தியோக வரம்புக்கு அப்பாற்பட்டது. சட்டப்படி அது தவறு’’என்கிறார்..

இது குறித்து தனது நூலில், தனது பதவி மற்றும் ஆங்கில அரசின் கண்டிப்பு காரணமாக தன்னால் அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மறுத்த வெல்ஸ் பரிதவிப்போடு தன் முன்னே நின்ற துரைச்சாமியின் உருவம் தன் மனதில் சொல்ல முடியாத வேதனையை உருவாக்கியது என்று எழுதி இருக்கிறார்.

மறவர் சீமையை ஆண்ட மன்னர்களின் மகன் கைதியாக ஒரு கடிதத்தைக்கூட அனுப்ப முடியாமல் கைவிடப்பட்டு நிற்கும் காட்சி வரலாற்றின் அழியாத துயரச் சம்பவம்.

பெரிய மருது தூக்கிலிடப்படுவதன் முன்பாக தனது வாரிசுகளைப் பாதுகாத்து, சொத்துகளைத் தர்ம காரியங் களுக்கு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று உருவிய கத்தி மீது சத்தியம் செய்யச் சொல்லியி ருக்கிறார்.

அக்னியூ துரையும் அப்படியே செய்வதாக சத்தியம் செய்திருக்கிறார். ஆனால், வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு துரைச்சாமி உட்பட 71 பேரை வாழ்நாள் முழுவதும் அயல்தேசத்தில் ஒடுங்கிக் கிடக்கும்படி செய்தது ஆங்கில அரசு.

அதன் பின் 1891 மே 18-ஆம் தேதி துரைச்சாமியின் மகன் மருது சேர்வைக்காரன் என்பவர், மதுரை ஆட்சியாளரிடம் ஓய்வூதி யம் கேட்டு அளித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

துரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, ஆங்கிலேய அரசிடம் தனக்கான பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால், திடீரென துரைச்சாமி நோய்வாய்ப் பட்டு சிவகங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகிறார்.

15 வயதில் சிறைக்குப் போய் வயதாகி நோய்மையுற்று வெளியே வந்து எந்த உரிமையும் இன்றி இறந்துபோன துரைச்சாமியின் வாழ்க்கை, சொல்லில் அடங்காத துயரம் கொண்டதாகவே இருக்கிறது. அந்த நினைவுகள் வெறும் வரலாற்றுத் தகவல்கள் அல்ல. ஆங்கிலேய அதிகாரம் எவ்வளவு ஒடுக்குமுறையானது என்பதன் அத்தாட்சி அது.

சுதந்திரப் போராட்டம் என்பது இப்படி வெளியே தெரியாமல் போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் உயிர்த் தியாகத்தால் உருவானது என்பதை அறியும் போதுதான் சுதந்திரத்தின்
உண்மையான மதிப்பை முழுமையாக உணர முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top