Close
நவம்பர் 21, 2024 11:42 மணி

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அறச்சலூர் பகுதி மக்கள் கோரிக்கை

ஈரோடு

பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைகூண்டு வைத்து பிடிக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டு வந்த பொதுமக்கள்

அறச்சலூர் குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மக்களின் அச்சத்தை போக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அடுத்த நாகமலை பகுதியில் கடந்த 14- ஆம் தேதி விவசாயி ஒருவரின் வீட்டுக்கு அருகே கட்டி வைத்திருந்த கன்று குட்டி காணாமல் போனதோடு மர்ம விலங்கு இழுத்துச் சென்றதற்கான தடயங்கள் பதிவாகி இருந்தது.

இதற்குள் அடுத்தடுத்து விவசாயிகளின்  கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி செல்வதால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது சிறுத்தை தான் என ஈரோடு மாவட்ட வனத்துறையினரும் உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை சார்பாக அரச்சலூர் நாகமலை பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு சிறுத்தை பிடிப்பதற்காக 4 இடங்களில் கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 10 நாட்களாக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை பிடிபடாமல் அப்பகுதியில் உலா வருவது வனத்துறையினரால் வைக்கப்பட்ட கேமராவில் பதிவாகி இருந்தது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அறச்சலூர், தச்சன்காட்டு வலசு, நாகமலை கிராம மக்கள் அனுமன்பள்ளி ஊராட்சி தலைவர் வி.எம். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நைனாமலை என்பவர் கூறுகையில், அறச்சலூர் நாகமலையிலிருந்து மேற்குத்தலவுமலை வரை 5 கி.மீ.க்கு மலையை சுற்றிலும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளை ஒட்டி பல்வேறு கிராமங்களும் விளைநிலங்களும் அமைந்துள்ளன. முன்பு இந்த வனத்தில் மான்கள் அதிக அளவில் இருந்தன. தற்போது சிறுத்தை நடமாட்டத்தால் மான்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

ஈரோடு
அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளித்த அறச்சலூர் பகுதி பொதுமக்கள்

இதனால் இரை தேடி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடுகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் விவசாய பணிகளுக்கு ஆட்கள் வர அஞ்சுகிறார்கள்.

தற்போது சிறுத்தையை பிடிப்பதற்காக 4 இடங்களில் கூண்டு வைத்துள்ளார்கள். இது போதாது. கூடுதலாக கூண்டு வைத்தால் மட்டுமே சிறுத்தை பிடிபடும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் இழப்பீடு வழங்க கோரியும் ஆட்சியரிடமும், அமைச்சர் சு முத்துசாமியிடமும் மனு அளித்துள்ளோம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top