Close
நவம்பர் 22, 2024 5:35 காலை

திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரியுங்கள்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன்

ஆளும் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரியுங்கள் என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது வெற்றியை எப்படி பெறுவது என்பதை நோக்கிய பயணம் தான் இந்த கூட்டம். வலுவான இந்த இயக்கத்தை வீழ்த்தி விட எந்த சக்தியாலும் முடியாது. இங்கு வந்துள்ள பூத் கமிட்டி செயல் வீரர்கள் மக்களை நேரடியாக நாடிச் செல்ல வேண்டும்.

மக்கள் சக்தியை ஒன்றாக திரட்டி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பணிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். இந்த இயக்கம் தொடங்கிய பிறகு 1975 -இல் நடைபெற்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் வெற்றியை பெற்று அதனை புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் சமர்ப்பித்தோம்.

அந்த வெற்றியை பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் செ.ம.வேலுசாமி. இதை நான் குறிப்பிட காரணம் எந்த பிரதிபலனும் பார்க்காமல் தேர்தல் பணியாற்றுவதில் அதிமுக செயல்வீரர்கள் சிறந்தவர்கள். சிலர் தேர்தல் வந்தால் கட்சிக்கு வருவார்கள் தேர்தல் முடிந்தால் சென்று விடுவார்கள். ஆனால் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எப்போதும் நிலையாக நின்று இந்த இயக்கத்தை கட்டி காத்து நிற்பார்கள்.

இந்த இயக்கத்தை உருவாக்கி தமிழக முதல்வராக பாடுபட்டு மக்களின் மனதில் நின்றவர் எம்ஜிஆர். ஆட்சியிலும், திரைத் துறையிலும் அவரை வீழ்த்த எந்த சக்தியும் பிறக்கவில்லை.
காற்றுக்கு எப்படி வெற்றிடம் கிடையாதோ அதுபோல அதிமுகவுக்கும் வெற்றிடம் கிடையாது.

காற்று இல்லாமல் உயிர் வாழ்ந்திட முடியாது. அதுபோல வெற்றிடம் இருந்தால் அங்கு காற்று இருக்காது. ஆக வெற்றிடத்தை நிரப்பி அதிமுக சிறந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

பசித்து வாழும் ஏழைகளின் உணர்வுகளை மதித்து ஆட்சியை நடத்தியவர் எம்ஜிஆர். அவரது மறைவுக்குப் பிறகு தடுமாறிக் கொண்டிருந்த கப்பலின் சிறந்த மாலுமியாக இருந்து இயக்கத்தை கட்டி காத்தவர் ஜெயலலிதா.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்து இந்திய வரலாற்றில் யாரும் செய்ய முடியாத பல அரிய சாதனைகளை செய்து முடித்தவர் ஜெயலலிதா. அதன் பின்னே இயக்கத்தை வழி நடத்திச் செல்லும் பொறுப்பை தாங்கி நிற்பவர் எடப்பாடி பழனிசாமி.

நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்து தமிழகத் தை தலைநிமிர செய்தவர் எடப்பாடியார்.வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்று நம்மை எவராலும் வீழ்த்த முடியாது என்ற சரித்திர உண்மையை மீண்டும் உலகுக்கு பறைசாற்ற வேண்டும்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சரித்திரம் மிக்க வெற்றியை பெற நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். இரட்டை இலை சின்னத்தை எவராலும் வெல்ல முடியாது என்ற உண்மையை எடுத்துக் கூறியவர் எம்ஜிஆர். இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிடும் நாம் இந்த முறையும் எம்ஜிஆரின் பாதையில் சென்று வெற்றியை நிலை நிறுத்த வேண்டும்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது நமக்கு குருஷேத்திர போரை போன்றது என்று எடப்பாடியார் கூறியுள்ளார். அந்தப் போரில் வெற்றி பெற்றது போல இந்த தேர்தலிலும் நாம் வெற்றியை பெறுவதற்கான ஆற்றலும் சக்தியும் நம்மிடம் உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து திருத்தப்பட வேண்டிய பட்டியலை வரும் நவம்பர் 5 -ஆம் தேதிக்குள் வழங்குமாறு செ.ம.வேலுசாமி கூறியுள்ளார்.
எங்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் 3ஆம் தேதியே அந்த பட்டியலை வழங்கி விடும் ஆற்றலை பெற்றவர்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.உங்கள் பணிகளை வெல்வதற்கு எந்த இயக்கத்தாலும் முடியாது.

இன்றைக்கு நடைபெறும் ஆட்சியின் அவலங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான தீவிரப் பணிகளை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நாம் நிறைவேற்றிய பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் தற்போது நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணி, அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் போன்றவற்றை எடுத்துக் கூறி வாக்குகளை பெற்று மீண்டும் 40க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்றார் கே.ஏ.செங்கோட்டையன்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுச்சாமி பேசியதாவது:

ஈரோடு
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி

கோபி சட்ட மன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும் பெருமை சேர்க்கும் தொகுதியாக, அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது.

உழைக்கின்ற மக்கள், தொழிலாளர், பாட்டாளி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எம்ஜிஆரால் தோற்று விக்கப்பட்டு ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் வளர்க்கப்பட்ட இயக்கமாக அதிமுக உள்ளது.

முன்பு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டு மோடியா?இந்த லேடியா? என்று சவால் விட்டு அதிமுகவை வெற்றி பெறச் செய்த ஜெயலலிதாவின் அடிகளைப் பின்பற்றி வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 தொகுதிகளையும் வெற்றி பெற செய்வதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தற்போது நாம் தேர்தல் பணியினை தொடங்கி உள்ளோம்.

முன்பு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியிலே தேர்தல் தலைமைக்குழு பொறுப்பை வழங்கி முன்னாள் எம்பி சிவசாமியின் வெற்றிக்கு பாடுபட வாய்ப்பு அளித்ததை போல தற்போது மீண்டும் எனக்கு இதே தொகுதியில் தேர்தல் தலைமை குழு பணியாற்ற வாய்ப்பு அளித்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், கே.ஏ. செங்கோட்டையனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தேர்தலைப் பொறுத்த வரையிலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குடும்ப ஆட்சியுடன் எங்கும், எதிலும் ஊழல் என்று ஆட்சி புரிவதுடன் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என எல்லா வரிகளையும் உயர்த்தியதால் எந்தத் தொழிலையும் செய்ய முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அலங்கோலமான இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று திமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் முடிவு செய்துள்ள சூழ்நிலையில் நாம் இந்தத் தேர்தலை சந்திக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இரண்டு கோடி தொண்டர்களுடன் கட்டுக்கோப்பான ஒரு குடும்பமாக அதிமுக திகழ்ந்து வருகிறது.

நமக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை. நமக்கு நாமே கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக களம் இறங்குவோம். நம்முடைய கட்சியின் பூத் கமிட்டியினருடன் தான் நமக்கு கூட்டணி. ஒரு தேர்தலின் வெற்றி என்பது பூத் கமிட்டியை சிறப்பாக அமைப்பதில் தான் உள்ளது என்று எடப்பாடியாரும், கே.ஏ.செங்கோட்டையனும் சொல்லுவார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பூத் கமிட்டி அமைக்கும் தலைமை பொறுப்பினை வழங்கி உள்ளார்கள்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 10 பூத் கமிட்டி உறுப்பினர் களுடன் நான்கு பேர் வீதம் நியமித்து உள்ளார்கள். தற்போது மேலும் நான்கு பேர் வீதம் நியமிக்க கட்சி தலைமை அறிவித்து உள்ளது. அந்த 4 பேர் யார் என்றால் கட்சியின் முன்னோடி தலைவர்கள் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள், முன்னாள் ஒன்றிய பேரூர் கழக பொறுப்பில் இருந்தவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பூத்துக்கு மட்டும் உறுப்பினர்கள் தினமும் ஒரு மணி நேரம் பணியாற்றினால் போதும். பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறை, மகளிரணி, தொண்டரணியைச் சேர்ந்தவர்களும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பதிலும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதிலும் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும்.

பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு நோட்டை போட்டு அதில் அவர்கள் சந்தித்த வாக்காளர்கள் பற்றிய விவரங்களை எழுதி தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களை நானே நேரடியாக களத்தில் இறங்கி பரிசோதனை செய்வேன் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதேபோல் நானும், கே.ஏ. செங்கோட்டையனும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்வோம். பூத்கமிட்டி உறுப்பினர்களின் பணிகளை அந்தந்த பகுதிகளின் கட்சி பொறுப்பாளர்கள் கண்காணிப்பதுடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தர வேண்டும்.

கட்சிப் பணியாற்றும் போது யார் பெரியவர்? சிறியவர் என்ற பேதம் பார்க்கக் கூடாது. எம்ஜிஆர் இந்த அதிமுக இயக்கத்தை ஆரம்பித்த போது கோவையில் பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கு அந்த காலகட்டத்தில் பணம் கொடுத்து உதவியவர் கே.ஏ. செங்கோட்டையன். அன்றிலிருந்து இன்று வரையிலும் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த இயக்கத்தை கட்டி காப்பதில் பெரும் பங்கு வகித்து வருபவர் கே.ஏ.செங்கோட்டையன்.

அவருடைய வழிகாட்டுதல்களை இன்று பின்பற்றுவதால் தான் இயக்கத்தின் மீது கொள்கையும் பிடிப்பும் இன்றளவும் எங்களுக்கு இருந்து வருகிறது.இயக்கத்தின் மீது முழுமை யான பற்றுதலோடு பூத் கமிட்டியை சேர்ந்தவர்களும் கட்சியினரும் முழுமையாக பாடுபட்டால் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் அதிமுகவின் வசமாகும் என்பதை உறுதிப்பட கூறிக் கொள்கிறேன் என்றார்  செ.ம.வேலுசாமி.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்பிக்கள் கேகே காளியப்பன், சத்தியபாமா , மாவட்ட பொருளாளரும் கோபி முன்னாள் நகர மன்ற தலைவர் மன கே. கே கந்தவேல் முருகன் , கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வழக்கறிஞர் மவுலீஸ்வரன,

கோபி சட்டமன்றத் தொகுதி அண்ணா திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் குறிஞ்சிநாதன் , வக்கீல் வேலுமணி , சுப்பிரமணி , கோபி நகரக் கழகச் செயலாளர் பிரி நீ யோ கணேஷ் , மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஆண்ட முத்து , மாவட்ட விவசாய அணி செயலாளர் கந்தசாமி ,

மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன் , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வாத்தியார் வேலுச்சாமி , மாவட்ட கவுன்சிலர் அனுராதா , கோபி நகர அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார்,

 நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி எம் விஸ்வநாதன் , நகர மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி , மற்றும் அண்ணா திமுக அனைத்து சார் பணி நிர்வாகிகளும் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top