Close
நவம்பர் 22, 2024 7:27 காலை

பாடகர் மீது கொலை வெறித்தாக்குதல் சிபிஎம் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

புதுக்கோட்டை

சிபிஎம்- தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

பட்டியல் சமூகப் பாடகர் பிரகாஷ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆயிக்குடி அண்ணாநகரில் வசிப்பவர் பிரகாஷ்  புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரபலமான பாடகர். 2019 -ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஜீ தமிழ்  “சரிகமப”-வின் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் கபிலன் ஆகியோர் வாராப்பூரில் காய்கறி மற்றும் பட்டாசு வாங்கிக் கொண்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மேலுடையான்பட்டி நான்கு ரோடு அருகே பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத இருவர் பிரகாஷ் மற்றும் கபிலனை வழிமறித்து சாதியைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இருவரும் அவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல்; செல்ல இவர்கள் முயன்றுள்ளனர். அப்போது,மேலும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டு பிரகாஷ் பாட்டில்களால் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் மீது கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயமடைந்த பிரகாஷ் மற்றும் கபிலன் உடனடியாக மழையூர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிரகாஷ் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்குப் பிறகு கபிலன் வீடு திரும்பி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரகாஷை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் கடந்த விவரங் களைக் கேட்டறிந்தனர்.

பிரகாஷிடம் பேசிய போது, தாக்குதல் நடத்தியவர்களுடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. அந்தப் பகுதியில் நான் கச்சேரியில் பாடி வருவதால் என்னை அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். பொதுவாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் வேண்டுமென்றே வம்பிழுப்பதும், கிண்டல் செய்வதும் இந்தப்பகுதியில் வழக்கமாக இருந்து வருகிறது.

அவர்களின் தாக்குதல், எங்கள் மீது கொலைவெறியுடனும், மோசமான காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இருந்தது. அக்கம் பகத்தினர் வந்திருக்கா விட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்றார்.

நடந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்சியும், வேதனையும் அளிக்கிறது. பொதுவாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஆதிக்க சாதியினர் எனக் கருதிக் கொள்ளும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. எங்கள் அமைப்புகளின் சார்பில் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனாலும், தீண்டாமை வன்கொடுமைகள் நின்றபாடில்லை.

எனவே, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரகாஷ் , கபிலன்  ஆகிய இருவரையும் தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டியல் சமூத்தைச் சேர்ந்தவர்களை ஆதிக்க மனோபாவத்தோடு தகறாறு செய்வது, அவமாப்படுத்துவது, அடித்து காயம் ஏற்படுத்துவது போன்று வன்மத்துடன் செயல்படும் நபர்கள் மீது காவல் துறை உரிய நடடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top