Close
நவம்பர் 24, 2024 8:59 மணி

வடகிழக்கு பருவமழை தொடக்கம்… தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க யோசனை

புதுக்கோட்டை

விவசாயிகளுக்கு அறிவுரை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை எதிர் கொள்வதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து தோட்டக் கலைப் பயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித் துள்ளார்.

தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேக்கத்தினால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க வடிகால்களை சீரமைப்பு செய்து பயிர்களை பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் செய்துள்ள விவசாயிகள் பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக் குடில்களை பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம்.

மேலும்  பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்றுப்புகாமல் பாதுகாத்தல் , கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்தல், அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்வது,  காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாத வகையில் பாதுகாக வேண்டும்.

மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

மேலும் காற்றினால் பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். மிளகு செடியில் நோய் வராமல் தடுக்க டிரைக் கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும்.

வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்பு களை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தபடுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு வடகிழக்கு பருவமழையினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கா வண்ணம் விவசாயிகள் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பயிர்களை பாதுகாத் திடலாம் என்று புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top