Close
நவம்பர் 22, 2024 5:11 காலை

ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக மூத்த முன்னோடிகள் 2600 பேருக்கு பொற்கிழி வழங்கல்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார், அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக மூத்த முன்னோடிகள் 2600 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி பெருந்துறை அருகே உள்ள சரளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுகசெயலாளரும் தமிழகவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைமதுவிலக்கு துறை அமைச்சருமான முத்துசாமி  தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார்

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநிலச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 70 வயதுக்கு மேற்பட்ட 2,580 மூத்த கட்சித் தொண்டர்களுக்கு ரூ.10,000 அடங்கிய பொற்கிழி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றாலும், ஈரோடு மாவட்டத்திற்கு வரும்போது, பெரியாரின் பாசறைக்கு திரும்புவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அந்த பெருமையான உணர்வோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

ஈரோடு மாவட்டத்திற்கு பலமுறை நான் வந்திருக்கிறேன். கட்சி உறுப்பினர், இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கிறேன். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் சுற்றுப்பயணம் ஈரோட்டில் மேற்கொண்டேன்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலின் போது, இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து பிரசாரம் மேற்கொண்டேன். திமுக அரசின் சாதனைகளுக்கு மக்கள் அளித்த தீர்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமைந்தது. 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாள ரான ஈவிகேஎஸ். இளங்கோவனை நீங்கள் எல்லோரும் சேர்ந்து வெற்றி பெற வைத்தீர்கள். அதற்கு நன்றி சொல்லவும் நான் வந்திருந்தேன்.

கட்சிக்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி அதை விட சிறப்பான நிகழ்ச்சியாகும். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடான, மாநில உரிமை மீட்பு மாநாட்டிற்காக, கடந்த வாரம் கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணியைத் தொடக்கி வைத்தோம்.

தமிழகத்தை அண்ணா, திருவள்ளுவர், கலைஞர், பெரியார் என நான்கு மண்டலங்களாக பிரித்து, அந்த வாகன பேரணியைத் தொடங்கி வைத்தோம். பெரியார் பிறந்து வளர்ந்த ஈரோட்டில் தான் கலைஞர் தங்கி இருந்து பயிற்சி பெற்றார்கள்.  பெரியார் மண் என பெருமையோடு குறிப்பிடப்படும் ஈரோட்டில், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் எந்த நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாகிகள் தேதி கேட்டாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளை கௌரவப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தினால் உங்கள் மாவட்டத்திற்கு வருவேன் என்று சொல்லி வருகிறேன். அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் 2600 பேருக்கு  பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் நடந்த பொற்கிழி வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், ‘உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம், இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள், இது ஒரு தந்தை மகனுக்கு சொல்லும் வாழ்த்து அல்ல. ஒரு தலைவர் தொண்டனுக்கு சொல்லும் வாழ்த்து’ என்று குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய மாவட்ட செயலாளர்களுக்கும் அந்த வாழ்த்தினைக் காணிக்கையாக்குகிறேன். அண்ணா அறிவாலயம் கலைஞர் அறக்கட்டளை சார்பில் மாதம் 8 பேருக்கு ரூ 25 ஆயிரம் வீதம் மருத்துவம், கல்வி உதவிக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ 5. 50 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞரணியின் சார்பில் கடந்த 6 மாதத்தில், தலா ரூ 25 ஆயிரம் என ரூ 50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளோம்.

கடந்த 2 ஆண்டுகளில் 45 மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 44.76 கோடி ரூபாய் பொற்கிழி வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் மாட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறு எந்த இயக்கமும் செய்யாததை திமுக செய்துள்ளது. கட்சிக்காக உழைத்து ரத்தம் சிந்திய மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது சாதாரண நிகழ்வு அல்ல.

ஒவ்வொரு தாத்தாவுக்கும் பேரனாக நான் செய்யும் கடமையாக கருதுகிறேன். உங்கள் ஆசிகளையும், வாழ்த்துகளையும் பெற வந்துள்ளேன். இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, அடுத்த மாதம் சேலத்தில் நடக்கிறது. அதற்கும் நீங்கள் நேரில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

மதுரையில் 3 மாதம் முன்பு ஒரு மாநாடு நடந்தது. அது புளிசோறு மாநாடு. ஒரு மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக அந்த மாநாடு நடந்தது. ஆனால், திமுக இளைஞரணி மாநாடு என்பது, இந்தியாவிலேயே இப்படி ஒரு எழுச்சியான மாநாடு நடந்ததில்லை என்பதை காட்டும் வகையில் நடக்கவுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக முதல்வர் நல்லாட்சி வழங்கி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக, நான்கு திட்டங்களை மக்களிடம் நீங்கள் சேர்க்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தை செயல்படுத்தியதால், ஒவ்வொரு மகளிரும் ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம் சேமிக்க முடிகிறது.

புதுமைப்பெண் திட்டத்தில், அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம், அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தால், 17 லட்சம் மாணவர்கள் நாள்தோறும் பயன்பெறுகின்றனர்.

அடுத்ததாய், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1.14 கோடி பேர் மாதம் ரூ 1000 பெறுகின்றனர். இந்த திட்டங்களை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

கடந்த சட்டசபைத்தேர்தலில் அதிமுக அடிமைகளை வீட்டுக்கு அனுப்பியது போல், வரும் மக்களவைத் தேர்தலில் அடிமைக ளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. அதற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.

அதற்கு மூத்த முன்னோடிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த வெற்றி இந்தியாவிற்கான வெற்றி. பாசிச பாஜகவிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற, நீங்கள் அனைவரும் பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக தலா ரூ 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை விட திமுக துண்டினை தோளில் போடுவதைத்தான் நீங்கள் பெருமையாக கருதுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். கழகத்தின் வரலாறே நீங்கள் தான்.நீங்கள் இல்லாவிட்டால் கலைஞர் இல்லை. திமுக இல்லை. இன்றைய முதல்வர் ஆட்சிக்கு வரவும் நீங்கள்தான் காரணம்.நான் கலைஞர், பேராசிரியர் கூட்டங்களுக்கு போய் நேரில் பார்த்து, பேச்சை கேட்டிருக்கிறேன்.

ஆனால், பெரியார், அண்ணாவை நேரில் பார்த்ததில்லை. இங்கு இருக்கும் பலர், அவர்களை நேரில் பார்த்து, பிரச்சாரம் செய்து இருப்பீர்கள். எனவே, உங்களை பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் மறு உருவமாக கருதி வணங்குகிறேன் என்றார் உதயநிதி..

இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது:

ஈரோடு
கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

சேலத்தில் நடக்கவுள்ள இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க உங்களை அழைக்க நான் வந்துள்ளேன். நீங்கள் எல்லோரும் மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதை நான் இங்கே பார்க்கிறேன்.

திமுகவில் பல்வேறு அணிகள் உள்ளன. அவற்றில் முதன்மை யான அணி இளைஞர் அணி என கலைஞர் பாராட்டியுள்ளார். சுயநலம் பார்க்காமல், பொதுநலம் கருதி களத்தில் இறங்கி பணியை செய்து முடிப்பவர்களே செயல்வீரர்கள்.

அப்படி பார்த்தால், அமைச்சர் முத்துசாமி தான் இந்த மாவட்டத்தின் முதல் செயல்வீரர். இரண்டாவது செயல்வீரர் நல்லசிவம். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு திமுக இளைஞரணியை உதாரணமாக காட்ட முடியும்.

உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று கலைஞர் பாராட்டி இருக்கிறார். 1967-ல் கோபாலபுரம் இளைஞர் திமுகவை ஸ்டாலின் தொடங்கினார். 1968-ல் சென்னை மாநகராட்சி தேர்தலில் பிரசாரம் செய்தார். 1969-ல், சென்னை மாவட்ட பிரதிநிதியாக தேர்வு. 1973 பொதுக்குழு உறுப்பினர், 1976 -ல் மிசாவில் கைதாகி ஒரு ஆண்டு சிறை. 1980-ம் ஆண்டு திமுக இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டபோது, அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். 1983 -ஆம் ஆண்டு, இளைஞரணி மாநில செயலாளர்.

2006 -ல் உள்ளாட்சித்துறை அமைச்சர். 2008 -ல் கட்சியின் பொருளாளர், 2009-ல் துணைமுதல்வர், அதன்பின் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர், கட்சியின் செயல் தலைவர், 2018-ஆம் ஆண்டு கலைஞர் மறைவிற்கு பிறகு கட்சியின் தலைவராகவும், 2021-ஆம் ஆண்டு தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக பதவியேற்றார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உழைப்பால் உயர்ந்தவர் நமது முதல்வர். யாருடைய காலில் விழுந்தும் முதல்வர் பதவியை பெறவில்லை. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம். அதற்கென குழு அமைத்து, அதன் அடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம்.

ஈரோடு
கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணிநிர்வாகிகள்

நீட் தேர்வு பிரச்னை என்பது இளைஞரணியின் பிரச்னை அல்ல. தமிழக மாணவர்களின் பிரச்னை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட நீட் தேர்வினை அனுமதிக்க வில்லை.  அவர் மறைவிற்கு பின் பொறுப்பேற்ற அடிமைகள்,  ஒன்றிய அரசிற்கு அடிபணிந்து, நீட் தேர்வை கொண்டு வந்து விட்டனர். நீட் தேர்வினால் அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து 21 பேர் இறந்துள்ளனர். இது மக்கள் பிரச்னை. இது மருத்துவக் கனவு.

நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்துவோர்தான் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க 50 லட்சம் கையெழுத்து பெற்று, டெல்லியில் கொண்டு போய் கொடுப் போம். இதுவரை நேரடியாக 16 லட்சம் கையெழுத்தும், போஸ்ட் கார்டு மூலம் 11 லட்சம் கையெழுத்தும் பெற்றுள்ளோம். டிசம்பர் 17-ம் தேதிக்குள் 50 லட்சம் கையெழுத்து பெறுவோம்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதுதான் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரும் கொள்கை கூட்டமாக மாற வேண்டும். எடப்பாடி பழனிசாமி கூட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நீட் தேர்வினை ரத்து செய்ய மசோதா நிறைவேற்றினார். எனவே, நீங்களும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று கையெழுத்திடுங்கள். நீட் தேர்வு ரத்தானால், அந்த பெருமையை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்று நான் சொன்னேன். ஆனால் அவர், இது திமுக நடத்தும் நாடகம் என்று சொல்லிவிட்டார்.

நாடகத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? நீங்கள் எப்படி முதல்வரானீர்கள்? தமிழக மக்கள் உங்களுக்கு வாக்க ளித்தார்களா? உங்களுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் காலை வாரி விட்டீர்கள். சசிகலாவின் காலைப்பிடித்து முதல்வராகி, அதன் பிறகு அவருடைய காலையே வாரிவிட்ட வர்தான் எடப்பாடி பழனிசாமி.

எனவே, எங்களுடைய நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் உள்ள மாணவர் கள் உரிமையை திமுக காப்பாற்றும். பெருந்துறை சிப்காட் பிரச்சினை 10 ஆண்டு கோரிக்கை. இதனை முதல்வரிடம் கொண்டு சென்று விரைவாக அரசாணை வெளியிட்டு, ரூ 40 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் படுகிறது.

ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரசாரத்தில் கூட பிரதமர் மோடி என்னைப் பற்றிப் பேசுகிறார். நான் எல்லோரும் சமம் என்று பேசினேன். ஆனால், நான் பேசாததை எல்லாம் பேசியதாக அவர் சொல்கிறார்.

நான் 5 நிமிடம் பேசியதை  ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கொண்டு சென்றிருக்கிறார். எனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லி விட்டேன். நான் உண்மையைத்தான் பேசினேன். எந்த வழக்கு வந்தாலும் நான் சந்திக்கத் தயார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் தான் வாழும் என்று பேசியிருக்கிறார். ஒட்டு மொத்த தமிழக மக்களும் கலைஞர் குடும்பம் தான். அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசுகள் நாங்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொன்னார்கள். ஆனால், ஒழிக்கவில்லை. திடீரென 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய இந்தியா பிறந்தது என்று சொன்னார்கள். ஆனால் பிறக்கவில்லை. 2021- ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று பிரதமர் சொன்னார்.

அதையும் இப்போது 2047 -ல் வல்லரசாக மாற்றிக் காட்டுவ தாகக் கூறுகின்றனர். இந்திய தணிக்கைக்குழு அறிக்கையில், 9 ஆண்டு பாஜக ஆட்சியில், 7 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியுள்ளதாக தெரிவித் துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரகாஷ், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் திருவாசகம்,முன்னாள் மேயர் குமார் முருகேஷ், முன்னாள் சிக்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன்,

மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் விவேக், இளைஞரணி அமைப்பாளர் சரளை ராசு, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சதிஷ், ராஜா, கதிரவன்,கார்த்தி மெகராஜ்,

மாநில திமுக விவசாய அணி துணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், பவானி நகர மன்ற தலைவி சிந்தூரி இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் கே.பி.சாமி, கதிர்வேல், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top