Close
நவம்பர் 22, 2024 12:27 மணி

போக்குவரத்து கழக தொழிலாளர் களுக்கு 15 வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரிக்கை

தஞ்சாவூர்

போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு, தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23.11.2023 அன்று திருச்சி போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு மாநிலந்தழுவிய தொடர் முழக்க போராட்டத்தில் அனைத்து கழக தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் பங்கேற்க அழைப்பு.

கடந்த 1.3. 1972 அன்று சேரன்,சோழன், பாண்டியன், பல்லவன் என்று நான்கு பெரும் கழகங்களாக அரசு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டது. சமூக நீதிக் கோட்பாடுகள், கிராம- நகர வளர்ச்சி, மாணவர்கள் படிப்பு ,வேலை வாய்ப்பு, மருத்துவம், வியாபாரம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் மகத்தான சேவை செய்து வந்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனது சேவையில் 50 ஆண்டுகால பொன்விழாவை கண்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த பணியி னால் அகில இந்திய அளவில் அரசு போக்குவரத்து கழகங் களில் வருவாய் பெருக்கம்,டீசல் சேமிப்பு, அதிக கிலோமீட்டர் இயக்கம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் இன்றளவும் பல்வேறு விருதுகளை பெற்று தமிழ்நாடு அரசுக்கு பெருமை சேர்த்து வந்துள்ளனர்.

இதற்கு காரணமாக இருந்த தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று சுமார் 90 ஆயிரம் பேர் உள்ளனர்.இவர்களுக்கு அரசு பொறுப்பேற்று வழங்கும் ஓய்வூதியம் கிடையாது, பிஎஃப் டிரஸ்ட் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தான் பெற்று வருகின்றனர்.

இவர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும், திமுக தேர்தல் காலவாக்குறுதி அடிப்படையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயர்வு கடந்த 2015 ஜூலை மாதம் முதல் நிறுத்தப் பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படும் பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகளை வழங்க வேண்டும். கடந்த 2016ல் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும்.

பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2019 ஒப்பந்தத்தில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை என்பது நான்கு வருடமாக நீட்டிக்கப்பட்டு கடந்த 31.8.23 அன்று முடிவடைந்துவிட்டது. 15 வது ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்டு 1.9.23 முதல் புதிய சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்பந்த கோரிக்கைகள் அளித்தும் அரசும்,கழக நிர்வாகமும் இது வரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை . உடனடியாக பேச்சுவார்த்தை துவக்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.  ஓட்டுனர், நடத்துனர்.

தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட. வேண்டும்.  ஒப்பந்த, காண்ட்ராக்ட் முறையில் பணிபுரிய மறைமுகமாக எடுத்து வரும் தனியார் மய நடவடிக்கைகளை அரசு விட வேண்டும்.

அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு சேவைத்துறை என்பதை அரசு அவ்வப்போது அறிவித்தாலும், போக்குவரத்து கழகங்களுக்கு உரிய மானியம் ஒதுக்கப்படுவதில்லை, வரவுக்கும், செலவுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க, மேம்படுத்த போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உரிய நிதியினை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு அரசுத் துறை ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ளது போல் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செயல்பட்டு வரும் போக்குவரத்து சங்க கூட்டமைப்பு அனைத்து மண்டலங்களிலும் அரசையும், கழக நிர்வாகத்தையும் வலியுறுத்தி வருகிற 23.11.2023 வியாழக்கிழமை அன்று மாநிலந்தழுவிய தொடர் முழக்க போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பினை ஏற்று 23.11.2023 அன்று காலை 10 மணிக்கு திருச்சி போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது .

இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கும்பகோணம்,திருச்சி, கரூர்,புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம் ஆகிய கழகங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களும் பெரும் திரளாக பங்கேற்று தொடர் முழக்க போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள், மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top