மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகையை நவம்பர் 26, 27 -ல் முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் தஞ்சையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
ஒன்றிய மோடி அரசு ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விலை ,பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.
தொழில் வளர்ச்சி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது பிரதமர் மோடி எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயின் கடன்களை ரத்து செய்தல், மின்சார சட்ட திருத்தம் திரும்ப பெறுதல், தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்கள் சுருக்கப்பட்டதை ரத்து செய்தல், கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை தாரை வார்த்தல்,
உடல் உழைப்பு கட்டுமானம் உள்ளிட்ட நல வாரியங்களை சீர்குலைப்பது உள்ளிட்ட கொள்கைகளில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நவம்பர் 26,27 தேதிகளில் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.
அதன் அடிப்படையில், சென்னை ஆளுநர் மாளிகை முன்பு நாளையும்,நாளை மறுநாளும் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை விளக்கி தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று(நவ 25) காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு பிரசார இயக்கம் தொடங்கியது.
கரந்தை, பள்ளியக்கரகாரம், நிக்கல்சன்வங்கி, பழைய பேருந்து நிலையம் , அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை ,ரயிலடி, காவேரி சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
பிரசார இயக்கத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர்,ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியூ மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன், ஐக்கிய விவசாய முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்கள் பி.செந்தில்குமார், ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் உள்ளிட்டார் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பிரச்சார இயக்கத்தில் ஏஐடியூசி நிர்வாகிகள் வெ.சேவையா, துரை.மதிவாணன், தி.கோவிந்தராஜன், ஆர்.பி.முத்துக்குமரன், பொன்.தங்கவேல், பி.செல்வம், ஜி.ராமலிங்கம், சி ஐ டி யூ மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, ஏ.ராஜா, இடிஎஸ் மூர்த்தி, பேர்நீதி ஆழ்வார், கே.மதியழகன், மணிமாறன், அப்துல் காதர்,
தொமுச சார்பில் பாஸ்டின், காளிமுத்து, முத்தையன், பாண்டியராஜன், திருமாறன், மணிகண்டன், ஜெயக்குமார் ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் அ.ரவிச்சந்திரன், முத்துக்கிருஷ் ணன், கீர்த்திவாசன், ஏஐசிசிடியூ மாரியப்பன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.