Close
நவம்பர் 24, 2024 6:30 காலை

பெற்றோர் ஆசிரியர் கழக கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை: இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை

இந்திய மாணவர் சங்கம்

பெற்றோர் ஆசிரியர் கழக கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று இந்திய மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசுக் கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக வரவு-செலவுக் கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆண்டுதோறும் முதலாமாண்டு படிப்பதற்கு சேர்க்கை நடைபெறுகிறது. இவர்களில் பெரும்பாண்மை மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து படிக்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாணவர்களிடம் ஆண்டுக்கு ஒருமுறை சிறப்புக் கட்டணம், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கட்டணம் மற்றும் நன்கொடை என பல வழிகளில் வசூல் செய்யப்படுகிறது. இக்கட்டணத்தை மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்வது தனியார் கல்லூரி நிர்வாகத்தின் சுரண்டலுக்கு நிகரானது.

பல லட்சம் ரூபாய் வசூல் செய்தும் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை வசதிகள்கூட பெரும்பாலான கல்லூரிகளில் செய்துகொடுக்கப்படவில்லை.

பெரும்பாலான கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் வசூல் செய்யப்படும் தொகைகளுக்கு முறையாக வரவு செலவும் பராமரிக்கப்படுவதில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் அரசுக் கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வசூல் செய்யப்படும் தொகைக்கு முறையாக வரவு-செலவு பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top