கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பலான ‘யாஷிமா’ புதன்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.
இந்தோ ஜப்பான் கடலோரக் காவல் படையின் சார்பில் சென்னைக்கு அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சாக்யோக் கைஜின் என்ற கூட்டுப் பயிற்சியில் ‘யாஷிமா‘ பங்கேற்க உள்ளது.
இந்தியா, ஜப்பான் நாடுகளிடையே கடந்த 2006-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருநாட்டின் கடலோரக் காவல் படையினர் உயர்மட்ட சந்திப்பு, வருடாந்திர கூட்டுப் பயிற்சிகள், பயிற்சிப் பரிமாற்றங்கள் மற்றும் குறுகிய கால பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், தொடர்புகளை மேம்படுத்து தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் இதற்கான நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்காக சென்னைத் துறைமுகத்திற்கு புதன்கிழமை வந்தடைந்த ஜப்பான் ரோந்துக் கப்பலுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் தேசிய மாணவர் படை மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பாண்டு இசைத்து வரவேற்றனர். நான்கு நாள்கள் சென்னையில் ‘யாஷிமா’ நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கும். அப்போது இருதரப்பினரும் பங்கேற்கும் விளை யாட்டு, கலாச்சார பரிமாற்றம், தொழில்நுட்பம் பரிமாற்றம் குறித்த நிகழ்ச்சிகள் கப்பலில் நடைபெற உள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் இப்பயணம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிழக்கு பிராந்திய அலுவலகத்தில் இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி டோனி மைக்கேல் மற்றும் ‘யாஷிமா’ கப்பலின் கேப்டன் யூச்சி மொடோயாமா ஆகியோர் பயணத் திட்டங்கள் குறித்து புதன்கிழமை சந்தித்து உரையாடினர்.
இதற்கிடையே நட்பு பாராட்டும் வகையில் இருநாட்டு வீரர்களும் பங்கேற்ற கைப்பந்து போட்டிகள் கொட்டிவாக் கத்தில் உள்ள நெல்லை நாடார் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.