பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு செவ்வாய்க் கிழமை கோலாகலமாக தொடங்கியது. வீரர்கள் உறுதி மொழியுடன் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினர். ஜல்லிக் கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும், 700 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும், நடிகர் சூரியும் வந்திருந்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 7 வது சுற்றுகள் நிறைவடைந்து 8வது சுற்று தொடங்கியது. 7வது சுற்றுகளின் முடிவில் 620 காளைகள் களமிறங்கின. பாலமேடு ஜல்லிக்கட்டு – 8 வது சுற்று முடிவில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள்:400, மொத்த மாடுகள் -714, பிடிபட்ட மாடுகள் – 118.
8 -ஆவது சுற்று முடிவில் முன்னிலை நிலவரம்: பிரபாகரன், பொதும்பு – 8 காளைகள்.தமிழரசன், சின்னப்பட்டி – 6 காளைகள், பாண்டீஸ்வரன், கொந்தகை – 6 காளைகள்அஜித், பொந்துகம்பட்டி- 5 காளைகள். துளசிராம், மஞ்சம்பட்டி- 5 காளைகளை அடக்கியிருந்தனர்.
10 -ஆவது சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பாலமேட்டில் முதல் பரிசை வென்றவர் என்ற பெருமையை பெற்றவர்.
மேலும் சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு தமிழக அரசு சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த காளையின் உரிமையாளருக்கும் தமிழக அரசு சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது
பாலமேடு ஜல்லிக்கட்டில் 4 காளை மாடுகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 2வது சுற்றில் 3 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கக்காசு, பாத்திரங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 14 மாடுபிடி வீரர்கள், 9 காளை உரிமையாளர்கள், 16 பார்வையாளர்கள், 3 காவலர்கள் உட்பட 42 பேர் காயமடைந்தனர்.