புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆர்எஸ்இடி ஐ -பயிற்சி நிறுவனத்தின் மூலம் அப்பகுதி பெண்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
முகாமுக்கு மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் தலைமை வகித்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் சர்மிளா, தில்லைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சி குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த கிராமத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப சுய தொழில்கள் செய்ய பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சி அளிக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இதன் அடிப்படையில் கீழப்பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தொடர்ந்து பத்து நாட்கள் உணவு மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு நன்கு அனுபவம் உள்ள வல்லுனர்கள் கொண்டு பயிற்சியும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பயிற்சியின் முடிவில் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் பெண்களுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. முறையாக பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடன் உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டு சுயதொழில் தொடங்க தேவையான உதவிகள் செய்யப்படும்.
எனவே பயிற்சியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் தவறாது கலந்து கொண்டு நல்ல முறையில் பயிற்சி பெற்று சுய தொழில் தொடங்கும் பெண்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிற்சி முகாமில் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் 35 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் ஜான்சி, வட்டார ஒருங்கிணைப்பாளர் இந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.